சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள். படம்: ம.பிரபு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சமூக நீதி அடிப்படையில் கல்வி,வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ராமதாஸ் பேசியதாவது:

மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 4,400-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன என்றும் தமிழகத்தில் மட்டும் 370 சாதிகள் உள்ளன என்றும் தெரியவந்தது.

அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்தபோது 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையான கோரிக்கை.

கடந்த ஆண்டு நவம்பரில் முதல்வர் பழனிசாமியை நாங்கள்சந்தித்துபோதும் இதை வலியுறுத்தினோம். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் தரவேண்டும். மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதுபோல, தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு அனுமதிக்காவிட்டாலும், நாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்.

சமநிலையற்ற, சமூகநீதியற்ற சமுதாயத்தில்தான் நாம் வாழ்கிறோம். இதை சரிசெய்வதற்காகத்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்கிறோம். சமூக நீதி அடிப்படையில் கல்வி,வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இது, பெரியார் விட்டுச் சென்றகோரிக்கைதான். எனவே, இக்கோரிக்கை நிறைவேற நாம் அயராது பாடுபடுவோம். இக்கோரிக்கை நிறைவேறாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்துவதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in