

இலங்கையில் தமிழில் தேசியகீதம் பாடத் தடை விதிக்கப்பட்டதால் அதீத கோபத்தில் தமிழர்கள் உள்ளனர். ஜனநாயகரீதியான போராட்டத்துக்கு இலங்கை தமிழர்களை அந்நாட்டு அரசு மீண்டும் தூண்டுகிறது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் இலங்கை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான மாவை.சோ.சேனாதி ராசா எம்.பி தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மாவை.சோ.சேனாதி ராசா எம்.பி ‘இந்து தமிழ் திசை'யிடம் உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் தேசியகீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடி வந்தனர். அதிபர் தேர்தலுக்குப் பிறகான இந்த அறிவிப்பு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடுவதை இலங்கையில் சில அமைச்சர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பிராந்தியரீதியிலான சமச்சீர் நாடு இந்தியா. பல இன மக்கள் கொண்ட நாடு. சுதந்திரம் பெற்று சிறப்பாக இயங்கி வரும் இந்நாட்டில் வங்க மொழியில் தேசியகீதம் பாடப்படுகிறதே தவிர இந்தியிலோ, வேறொரு பெரும்பான்மை மக்களின் மொழியிலோ பாடப்படுவதில்லை. இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இலங்கையில், தமிழில் தேசியகீதம் பாடினால் மட்டும் இனப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. தமிழில் பாடத் தடை விதிக்கப்பட்டதால் அதிக கோபம் மக்களிடம் உருவாகியுள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்சவால் குறைந்தப்பட்ச உரிமைகூட நிராகரிக்கப்படுகிறது. பவுத்த சிங்கள ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்கிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதற்கிடையில் ஜனநாயகரீதியான போராட்டத்துக்கு அரசு மீண்டும் தமிழர்களை தூண்டிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கான சவால்
இந்திய பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு மாறாக அதிபர் கோத்தபய ராஜபக்ச முரண்பட்ட கருத்தை வெளிப்படுத்துகிறார். இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவால். இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எங்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது.
மேலும், ஐநா மனித உரிமை தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது. விரைவில் 2 அறிக்கைகள் ஜநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சர்வதேச தீர்மானங்களும் இந்திய அக்கறையும் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை கொடுக்கும் சூழல் எதிர்காலத்தில் ஏற்படும் என நம்புகிறோம். போர் காலத்துக்கு முன்பும், பின்பும் தமிழர்களின் பகுதியில் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. மீள்குடியேற்றமும் அனுமதிக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாநிலங்கள் இன்னும் மீளவில்லை.
இவ்வாறு மாவை.சோ.சேனாதி ராசா எம்.பி. கூறினார்.