'ஹே ராம்' படத்தில் கிடைத்த அனுபவங்கள் தொடர்பாக ராணி முகர்ஜி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கமல் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் 'ஹே ராம்'. 2000-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நேற்றுடன் (பிப்ரவரி 19) வெளியாகி 20 ஆண்டுகள் முடிந்தன. இந்தப் படத்தில் ஷாரூக் கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, நஸ்ரூதின் ஷா, வசுந்தரா தாஸ், ஓம் பூரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இப்போது பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். 'ஹே ராம்' படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் நேற்று தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார்கள்.
இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக நடித்த ராணி முகர்ஜி, தனது 'ஹே ராம்' அனுபவம் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''எனக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவமாக ’ஹே ராம்’ இருந்தது. எனது நடிப்பு வாழ்க்கையில் அந்தக் கட்டத்தில் கமல்ஹாசனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் அவரது நடிப்பைப் பார்த்து எப்போதும் வியந்திருக்கிறேன். இதில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருந்தேன். நான் தவறவிடக்கூடாது என்று நினைத்த வாய்ப்புகளில் ஒன்று அது. படப்பிடிப்புக்காக சென்னைக்குச் சென்றது இன்னும் நினைவில் உள்ளது.
ஒட்டுமொத்தப் படப்பிடிப்பிலிருந்த ஒழுங்கு எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு ஆரம்பமாகும்போது ஒரு மணி அடிக்கும். ஒப்பனைக்கென குறிப்பிட்ட நேரம், சிகை அலங்காரத்துக்கென தனி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
படப்பிடிப்பில் ஒழுங்கு
இன்று படப்பிடிப்புக்கென்று ஒரு அழைப்பு, ஒப்பனைக்கு நேரம், சிகை அலங்காரத்துக்கு நேரம், உடை மாற்ற நேரம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அன்றே ’ஹே ராம்’ படப்பிடிப்பில் ஒரு தயாரிப்புத் தரப்பு இந்த ஒவ்வொரு விஷயத்தையும் பின்பற்றுவதைப் பார்த்தது அற்புதமாக இருந்தது.
காலை 6 மணிக்கு முதல் ஷாட் படமாக்கப்படும். மணி அடிக்கும்போதுதான் படப்பிடிப்பு முடியும். குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி ஒரு நிமிடம் கூடக் கூடுதலாகப் போகாது. இன்னும் ஒரு டேக் மீதமிருந்தாலும் கூட, அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கான ஒத்திகையை நாங்கள் பார்த்துவிட்டாலும்கூட, மணி அடித்துவிட்டால் முடித்துவிட வேண்டும். விட்ட இடத்திலிருந்து அடுத்த நாள் தொடங்க வேண்டும். இந்த வேலை ஒழுங்கு, நெறிமுறைகள் எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.
கமல் அளித்த உத்வேகம்
அன்றைய நாட்களில் நான் உயரம் குறைவாக இருப்பதால் குதிகாலை நன்றாக உயர்த்தும் பெரிய காலணிகளை அணிந்திருப்பேன். கமல் எனது காலணியைப் பார்த்து ‘என்ன இது’ என்று கேட்டார். 'நான் குள்ளமாக இருப்பதால் இப்படியான உயரமான காலணிகளில் நடப்பதுதான் சவுகரியம்' என்றேன். அதற்கு அவர், ''சாதாரண தட்டையான செருப்புகளை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை வைத்து உங்களை மதிப்பிட மாட்டார்கள், உங்கள் சாதனைகளை வைத்துதான் மதிப்பிடுவார்கள்'' என்றார். அந்த வார்த்தைகள் என்றும் என்னுடன் தங்கிவிட்டன. அப்போதிலிருந்து எனது உயரம் பற்றி நான் கவலைப்படவில்லை. தன்னம்பிக்கையுடன் இருந்தேன். ஒரு நடிகராக இருக்க உயரமாக இருக்க வேண்டியதில்லை. நடிகராக இருப்பது ஒழுங்காக நடிக்க மட்டுமே. இந்த மிகப்பெரிய பாடத்தை நான் கமல்ஹாசனிடமிருந்து கற்றேன்.
ஒப்பனையின்றி நடித்த அனுபவம்
முதல் நாள் படப்பிடிப்புக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. ஒப்பனை செய்துகொண்டு போய் நின்றேன். கமல் என்னைப் பார்த்து, ’சரி போய் முகத்தைக் கழுவிவிட்டு வாருங்கள்’ என்றார். எனக்கு அவர் சொன்னது சட்டெனப் புரியவில்லை. ‘என்ன’ என்றேன், அதற்கு அவர், ‘ஆம், சென்று முகத்தைக் கழுவிவிட்டு வாருங்கள்’ என்றார். நான் சென்றேன். ஒரு நடிகராக, ஒப்பனை இன்றி கேமராவுக்கு முன் நிற்பதில் என்றுமே ஒரு அச்சம் இருக்கும்.
அந்த அச்சம் எனக்கும் இருந்தது. நான் கொஞ்சம் ஒப்பனையை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் வந்தேன். என்னைப் பார்த்த கமல், 'இல்லை மீண்டும் முகத்தைக் கழுவுங்கள்' என்றார். நான் கழுவிவிட்டேன் என்றேன். 'இல்லை நீங்கள் கழுவவில்லை. படப்பிடிப்பு முடிந்து எப்படிச் செல்வீர்களோ, அப்படிக் கழுவுங்கள்' என்றார். சரி என்று சொல்லிவிட்டு எனது மொத்த ஒப்பனையையும் கலைத்துவிட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தேன்.
'ஹே ராம்' கொடுத்த தன்னம்பிக்கை
அன்றைய நாட்களில் ஒப்பனை இல்லாமல் ஒரு படத்தில் நடிப்பது கேள்விப்படாத ஒன்று. கமல் என் நெற்றியில் ஒரு பொட்டு மட்டும் வைத்துவிட்டு, ஒப்பனைக் கலைஞரை என் கண்ணுக்கு மை மட்டும் போடச் சொன்னார். அது முடிந்தவுடன், 'இப்போது என் அபர்ணா தயார்' என்றார்.
ஒரு நடிகருக்கு அவ்வளவு ஒப்பனை தேவையில்லை என்பதையும் அப்போதுதான் முதல் முறை உணர்ந்தேன். ஒப்பனை இல்லாமலே கூட நடிக்கலாம். அது ஒளி அமைப்பு, லென்ஸைப் பொருத்தது. அந்தப் படப்பிடிப்பை கமல் அவர்கள் கையாண்ட விதத்தில் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கிடைத்தது”.
இவ்வாறு ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!