தமிழ் சினிமா

காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்: சதீஷை கலாய்த்த ஹர்பஜன் சிங்

செய்திப்பிரிவு

'பிரண்ட்ஷிப்' படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் என்று சதீஷை கலாய்த்துள்ளார் ஹர்பஜன் சிங்

தமிழில் 'டிக்கிலோனா' என்ற படத்திலும், வெப் சீரிஸ் ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஹர்பஜன் சிங். அதனைத் தொடர்ந்து புதிதாக 'பிரண்ட்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர். இதில் ஹர்பஜன் சிங்கிற்கு நாயகியாக 'பிக் பாஸ்' லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷை ஒப்பந்தம் செய்து அறிவித்தது படக்குழு. இந்த அறிவிப்பு தொடர்பாக சதீஷ் தனது ட்விட்டர் பதிவில் "நம் சென்னை ஐபில்-ன் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி" என்று பதிவிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங், சதீஷின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு "புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கிச் செய்வோம்" என்று கலாய்த்துப் பதிவிட்டுள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT