

'பற' என்ற தலைப்புக்குத் தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், படத்தின் தலைப்பை மாற்றியுள்ளது படக்குழு.
கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பற'. சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு முதலில் 'பற' என்று தலைப்பிட்டு இருந்தார்கள். ஆனால், படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 'பற' என்ற தலைப்புக்குத் தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
படத்தின் தலைப்பை மாற்றினால் பிரச்சினையில்லை. மாற்றவில்லை என்றால் 'ஏ' சான்றிதழ் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளனர். படத்தின் வியாபாரத்தை மனதில் வைத்து 'எட்டுத்திக்கும் பற' எனத் தலைப்பை மாற்றி தணிக்கைப் பணிகளை முடித்துள்ளது படக்குழு.
தணிக்கை சர்ச்சை குறித்தும், படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் கீரா பேசும்போது, "தணிக்கை அதிகாரிகள் படத்தின் தலைப்புக்கு அனுமதி அளிக்காத காரணத்தால் மாற்றிவிட்டோம். 'பற' என்பதைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. 'பற' என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன்.
இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. காதல் என்பது மனிதரின் இயற்கையான உணர்வுகளில் ஒன்று. இதில் எப்படி நாடகம் வரும்? அப்படிச் சொல்வதே முட்டாள்தனம். அயோக்கியத்தனம். இதுபோன்ற கருத்து மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிறது.
இரு தனி நபர்களுக்குள்ளான காதல் விஷயத்தை, எப்படி தமிழ்நாடே அதிரும்படியான விஷயமாக்குகிறார்கள். அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதை ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அது குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட எல்லா அரசியல்வாதியையும் சொல்லியிருக்கிறோம்” என்று பேசியுள்ளார் இயக்குநர் கீரா.
இந்தப் படத்தை மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு முடிவு செய்துள்ளது.