தமிழ் சினிமா

அருண் விஜய்யின் வெற்றிக்குக் காரணம்: ப்ரியா பவானி சங்கர்

செய்திப்பிரிவு

அருண் விஜய்யின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பது குறித்து 'மாஃபியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ப்ரியா பவானி சங்கர் பேசினார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனால் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் ப்ரியா பவானி சங்கர் பேசும் போது, "’மாஃபியா’ எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். திரையுலக வாழ்க்கை என்பதைத் தாண்டி எனது பெர்சனல் வாழ்க்கைக்குள் நிறைய நல்ல நண்பர்களைக் கொண்டு வந்த படம். திரையுலகிலும் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். இந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் என்னை யோசித்ததிற்கு முதலில் நன்றி.

அருண் விஜய் - பிரசன்னா இருவருமே அற்புதமான நடிகர்கள். நாயகன் - வில்லன் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. பிரசன்னாவுடன் எனக்கு காட்சிகளே இல்லை. ஆனால், ஷுட்டிங்கிற்கு முன்பு அவருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர் கார்த்திக் நரேன்.

இது தான் வரப்போகுது என்பது படப்பிடிப்புக்கு முன்பே ப்ளான் பண்ணிவிட்டார். ஆகையால், படப்பிடிப்பில் தேவையில்லாத ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை. அந்த திட்டமிடல் தான் எங்கள் அனைவருக்கும் பணிபுரிய எளிதாக இருந்தது. அவர் ரொம்பவே திறமையானவர்.

அருணிடம் என்னுடைய அன்பைப் பல முறை சொல்லியிருக்கிறேன். என் வாழ்க்கையில் ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவருடன் பணிபுரிந்து அவரது பாசிட்டிவிட்டியை கவனித்துள்ளேன். வெற்றியைப் பார்த்தவர்கள் பாசிட்டிவாக இருப்பது வழக்கமான ஒன்று. வெற்றிக்காகப் போராடும் போது அப்படி இருப்பது எளிதல்ல. வெற்றிக்காகக் காத்துக் கொண்டிருந்த நாட்களில் அவரிடமிருந்த கண்ணியம், விடாமுயற்சி தான் இன்றைக்கு அவருடைய வெற்றியை இன்னும் அழகாக்கி இருக்கிறது.

அருண் விஜய் திரையுலகிற்கும் வந்து 25 ஆண்டுகளாகிவிட்டது என்பது சொன்னால் தான் தெரிகிறது. இப்போதும் 'தில்ரூபா' பாடலில் பார்த்த அருண் விஜய் மாதிரியே இருக்கிறீர்கள். இங்கிருந்து தொடங்கி இன்னும் 25 ஆண்டுகள் நீங்கள் பயணிக்க வேண்டும். தயவு செய்து ஷுட்டிங் முடிந்து வீட்டுக்குப் போங்கள், அதிகாலை 3 மணிக்கு எல்லாம் ஜிம்முற்கு செல்லாதீர்கள்” என்று பேசினார் ப்ரியா பவானி சங்கர்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT