தமிழ் சினிமா

பாஜகவில் இணைந்ததன் பின்னணி: இயக்குநர் பேரரசு வெளிப்படை

செய்திப்பிரிவு

பாஜகவில் இணைந்ததன் பின்னணி குறித்து இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, அஜித் நடித்த ‘திருப்பதி’, விஜயகாந்த் நடித்த ‘தருமபுரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் பேரரசு. இயக்குநர் சங்கப் பொருளாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்த பேரரசு, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேரரசுவிடம் கேட்டபோது, "அப்பா திமுகவில் இருந்து எம்ஜிஆருடன் வெளியேறி, அதிமுகவில் இருப்பவர்தான். ஆனால், மாநிலத்துக்குள்ளேயே சுருங்கிவிடாமல், தேசிய அரசியலில் முத்திரை பதித்த காமராஜரையும், பசும்பொன் தேவரையும்தான் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்று, மதப்பற்று, மொழிப்பற்று இருக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அதற்குப் பொருத்தமான கட்சியாக பாஜக இருப்பதால் அதன் மீது ஓர் ஈர்ப்பு. அதற்காக அக்கட்சியின் எல்லாக் கொள்கையுமே எனக்குப் பிடிக்கும் என்று அர்த்தமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவில் பல்வேறு திரையுலகினர் இணைந்து வருகிறார்கள். ஆகையால், நீங்களாகவே இணைந்தீர்களா அல்லது இழுக்கப்பட்டீர்களா என்ற கேள்விக்குப் பேரரசு பதில் அளிக்கையில், "இரண்டுமே இல்லை. முகநூலிலும், ட்விட்டரிலும் சமூக அக்கறையுடன் நான் போடும் கருத்துகள் கட்சி வேறுபாடின்றி அனைவரையும் கவர்கிறது. தமிழிசை அக்கா, பொன்.ராதா அண்ணன் இருவருமே என்னை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் கூட ஒருமுறை போனில் தொடர்புகொண்டு பாராட்டினார். எனக்கு மதப்பற்று அதிகம். அதற்காக மற்ற மதங்களை விமர்சிக்கமாட்டேன். ரஜினி, பெரியாரைப் பற்றிப் பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால், இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ட்வீட் செய்தேன். அது இரண்டரை லட்சம் பேரால் பகிரப்பட்டது.

நம் நாத்திக வீரர்களுக்கு, இந்துக் கடவுள்கள் மட்டும் இல்லை என்று சொல்லும் தைரியம் இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள், உங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறோம் என்று சொல்பவர்களால், இந்து மக்கள் விருப்பமுடன் இட்ட விபூதி, குங்குமத்தை ஒரு அரை மணிநேரம் நெற்றியில் வைத்துக்கொள்ள முடியாதா? கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் அழிக்கிறார்களே? நான் பாஜகவில் சேர்வதற்கு இதுவும் ஒரு காரணம். இந்து மதத்தை யாராவது இழிவுபடுத்தினால், அவர்களது வீட்டை இந்துக்கள் முற்றுகையிடும் காலம் வரும்" என்றார் இயக்குநர் பேரரசு.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT