தமிழ் சினிமா

விஜய்க்குப் பின்னால் எவ்வளவு பேர்: கருணாஸ் சூசகம்

செய்திப்பிரிவு

விஜய்க்குப் பின்னால் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மற்றும் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 11) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கருணாஸ் பேசியதாவது:

''நெய்வேலியில் 'மாஸ்டர்' ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. பாஜகவினர் போராட்டத்துக்குப் பின்புதான் பலரும் ஷூட்டிங் நடப்பது தெரிந்து அங்கு கூடத் தொடங்கினார்கள். இன்று விஜய்க்குப் பின்னால் அந்த இடத்தில் மட்டும் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகிவிட்டது” என்று கருணாஸ் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, "ரஜினிக்கு வருமான வரித்துறையிலிருந்து விலக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால், விஜய்க்கு இவ்வளவு தூரம் கெடுபிடி போட்டுள்ளார்களே" என்ற கேள்விக்கு கருணாஸ் "ரஜினி சாருக்கு வருமான வரித்துறையில் விலக்குக் கொடுத்துள்ளார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படிக் கொடுத்திருப்பதற்கும் வாய்ப்பில்லை.

இந்தியாவில் ரஜினியும் ஒரு குடிமகன்தான். அவருக்கு மட்டும் வருமான வரித்துறையில் சலுகை கொடுத்துள்ளார்கள் என்பது எல்லாம் அர்த்தமற்ற பேச்சு. சமீபமாக ரஜினியின் கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால், எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு சலுகை கொடுத்திருக்கலாமோ என்ற ஐயப்பாடு எனக்கும் ஏற்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை என்பது சட்டத்துக்கு உட்பட்டதுதான். அதில் பெரியவர், சிறியவர் என்று கிடையாது. தனிப்பட்ட நடிகர் விஜய் மீது மட்டும் வருமான வரித்துறை சோதனை தொடுக்கப்படவில்லை. இந்தச் சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது" என்று கருணாஸ் பதிலளித்தார்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT