தமிழ் சினிமா

'நான் சிரித்தால்' உருவாகக் காரணம் ரஜினி: இயக்குநர் ராணா வெளிப்படை

செய்திப்பிரிவு

'நான் சிரித்தால்' படம் உருவாகக் காரணம் ரஜினி தான் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராணா பேசினார்.

ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் சிரித்தால்'. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் படத்தின் இயக்குநர் ராணா பேசும் போது, "எனது பெற்றோர்கள், ரஜினிகாந்த் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் இவர்கள் மூவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னுடைய ‘கெக்க பெக்க’ குறும்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார். அவரின் பாராட்டுதான் 20 நிமிட குறும்படம் 2.20 மணி நேரமாக மாறியது.

இயக்குநர் ஷங்கர் செய்யும் பணியில் 5 சதவீதம் செய்தாலே நான் வெற்றி பெற்று விடுவேன். உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கு இருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்சினைகள் போன்றவற்றைத் தள்ளி வைத்துச் சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம்.

ஆகையால், திரையரங்கிற்கு வந்து அனைவரும் படத்தைப் பாருங்கள். காதலர் தினத்தன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது" என்று பேசினார் இயக்குநர் ராணா. இந்த விழாவின் இறுதியாக ‘ஹிப் ஹாப்’ ஆதி ‘நான் சிரிச்சா வேற லெவல்’ என்ற பாடலை வெளியிட்டு மேடையில் பாடிக் கொண்டே ஆடினார்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT