

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது ஏன் என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகளிலும், வெளிநாட்டிலும் நடைபெற்றது.
இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெறவில்லை. தற்போது அஜய் தேவ்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் ராஜமவுலி. இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் ஜூலை 30-ம் தேதி இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாகப் படக்குழுவினர் அமைதி காத்து வந்தனர்.
தற்போது வெளியீட்டுத் தேதி மாற்றம் தொடர்பாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அன்பும், ஆதரவும் எங்கள் கடின உழைப்பையும், அடுத்தடுத்த கடினமான படப்பிடிப்பையும் மதிப்புள்ளதாக ஆக்கிவிட்டன. இதுவரை நீங்கள் கண்டிராத சினிமா அனுபவத்தைத் தர நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
மிகப்பெரிய சர்வதேச வெளியீடு திட்டமிட்டிருப்பதால், வெளியீட்டுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டியிருக்கிறது. உங்கள் ஏமாற்றத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எதிர்நோக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஏனென்றால் உங்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தர இது எங்களுக்குக் கூடுதல் நேரத்தைத் தந்துள்ளது.
ஜனவரி 8, 2021 அன்று #RRR வெளியாகும். இந்தக் காத்திருப்பு அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அதுவரை உங்களுக்குத் தொடர்ந்து படம் பற்றிய புதிய செய்திகள் வரும் என்று உறுதியளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறவிடாதீர்!