

'என்னை அறிந்தால்' படம் வெளியான நாள் தன் பாதையை மாற்றிய நாள் என்று அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா, அனைகா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். 2015-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இந்தப் படம் தான் அருண் விஜய்யின் திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த படம். இந்தப் படம் வெளியான அன்று காசி திரையரங்கில் முதல் காட்சியை அஜித் ரசிகர்களுடன் அருண் விஜய் கண்டுகளித்தார். அப்போது ரசிகர்களின் அன்பால் அவர் கண் கலங்கினார். இன்றுடன் (பிப்ரவரி 5) இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில், "பொறியை ஆரம்பித்து வைத்த நாள். என் பாதையை மாற்றிய நாள். விக்டர் வந்த நாள். என்னை விக்டாராக இருக்க வைத்ததற்கு இயக்குநர் கவுதம் மேனனுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். பெருந்தன்மையுடன், கனிவுடன் இருந்த நம் தல அஜித்துக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'மாஃபியா' வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'சினம்', ’அக்னி சிறகுகள்’, 'பாக்ஸர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.
தவறவிடாதீர்!