கலைக்கு நியாயம்; குடும்பத்துக்கு அநீதி: பாரதிராஜா உருக்கம்

கலைக்கு நியாயம்; குடும்பத்துக்கு அநீதி: பாரதிராஜா உருக்கம்

Published on

கலைக்கு நியாயம் செய்தவன், குடும்பத்துக்கு அநீதியை இழைத்துவிட்டேன் என்று பாரதிராஜா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கி, நடித்து, தயாரித்த படம் ‘ஓம்’. இந்தப் படத்தில் ராசி நக்‌ஷத்ரா, மெளனிகா, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் பாரதிராஜாவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்தாலும், வெளியிட முடியாமல் இருந்தது.

தற்போது இந்தப் படத்தின் தலைப்பை ’மீண்டும் ஒரு மரியாதை’ என மாற்றியுள்ளனர். பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், பாரதிராஜா கூறியிருப்பதாவது:

''50, 60 வயதுகளில் நாம் புதிய விஷயங்களை உணர ஆரம்பிப்போம். 'மீண்டும் ஒரு மரியாதை' அப்படியான ஒரு படம். ஒரு வயதானவருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உணர்வைப் பற்றியது. ஆனால், இது காதல் கதையா என்றால் அது நீங்கள் காதல் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

அன்புக்காக ஏங்கும் இரண்டு கதாபாத்திரங்களின் கதை இது. எனது கதாபாத்திரம் வெண்பா என்ற பெண்ணை அயல்நாட்டில் சந்திக்கிறது. அவள் இந்த வயதான நபர் மீது ஈர்க்கப்படுகிறாள். அந்த வயதானவரோ, 'நான் சூரிய அஸ்தமனத்தின் அருகில் இருக்கிறேன், நீ சூரிய உதயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறாய். ஏன் இங்கு வர விரும்புகிறாய்' என்று கேட்கிறார். இதுதான் கதை. இவர்கள் இருவரும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் அது காதலா, காமமா அல்லது அன்பா என்பது தெரியாது.

மதன் கார்க்கிதான் நாயகிக்கு வெண்பா என்று பெயர் வைக்க யோசனை கொடுத்தார். ஏனென்றால் அந்தக் கதாபாத்திரம் ஒரு கவிதை போல. நான் முதலில் இந்தக் கதைக்கு வேறொரு முடிவை எழுதியிருந்தேன். ஆனால் அதை மாற்ற வேண்டியிருந்தது. மக்கள் முற்போக்காக மாறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டாலும் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்''.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், "சினிமாவைத் தேர்வு செய்ததிற்கு வருத்தப்பட்டுள்ளீர்களா" என்ற கேள்விக்கு பாரதிராஜா பதில் அளிக்கையில், "குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை நான் தோல்வியடைந்தவன். எனது மனைவி, குழந்தைகளை விட சினிமாவை நான் அதிகம் விரும்பினேன். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் கலைக்கு நியாயம் செய்த நான் என் குடும்பத்துக்கு அநீதியை இழைத்துவிட்டேன்" என்றார்.

தவறவிடாதீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in