அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, மார்ச் 15-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள் இந்த விருது அறிவிப்பையும் விழாவையும் ஆவலாக எதிர்நோக்கி உள்ளனர். இந்தக் கொண்டாட்ட விழாவுக்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பல்வேறு நாடுகளிலிருந்து திரைக்கலைஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய கூட்டு ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான், அமெரிக்கத் தளங்களையும், இஸ்ரேலில் உள்ள ராணுவ இலக்குகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் வளைகுடா நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ) எச்சரித்துள்ளது. இதனால் ஆஸ்கர் விருது விழா நடைபெறும் பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை கலிபோர்னியா நிர்வாகம் பலப்படுத்தி இருக்கிறது.