உலக மசாலா: கரடி நண்பன்!

By செய்திப்பிரிவு

ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லனா, யூரி பண்டெலீன்கோவும் 3 மாத கரடிக் குட்டியைத் தத்தெடுத்துக்கொண்டனர். ஸ்டீபன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கரடிக்கு இப்போது 23 வயது. 7 அடி உயரமும் 136 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான கரடியாக உருவெடுத்துவிட்டது. ஸ்வெட்லனா, யூரியுடன் சேர்ந்து பந்து விளையாடுகிறது. செடிகளுக்கு நீர்ப் பாய்ச்சுகிறது. சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கிறது. உணவு மேஜையில் அமர்ந்து தேநீர் பருகுகிறது, ரொட்டியைச் சாப்பிடுகிறது. யூரியுடன் கட்டிப் பிடித்து உருளுகிறது. அவர் படித்துக் காட்டும் கதைகளை ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறது. அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தூங்குகிறது.

‘‘ஸ்டீபன் எங்கள் செல்லக் குழந்தை. அவன் எங்களுக்கு அளித்து வரும் சந்தோஷமான தருணங்கள் ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாதவை. 23 ஆண்டுகளாக ஏராளமான புகைப்படங்கள் எடுத்திருக்கிறோம். அவை அனைத்தும் எங்கள் வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கின்றன. ஒரு நாளைக்கு 25 கிலோ மீன், காய்கறிகள், முட்டைகளைச் சாப்பிடுவான். ஒரு கரடியால் இவ்வளவு மென்மையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் இவனைத் தத்தெடுக்கும்போது, அவன் தாயை இழந்து, மோசமான நிலையில் இருந்தான்.

எங்கள் அன்பாலும் கவனிப்பாலும் விரைவில் குணமடைந்தான். இன்றுவரை அவனுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஸ்டீபன் இசையை மிகவும் விரும்புவான். வீட்டுக்கு வெளியே எந்த உணவையும் சாப்பிட மாட்டான். கால்பந்து விளையாட்டு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வருகிறவர்களிடம் அத்தனை நாகரிகமாக நடந்துகொள்வான். ஆனால் அவனை முதல் முறை பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள். இதுவரை யாருக்கும் சிறிய தீங்கு கூட அவன் இழைத்ததில்லை. அவனுக்கு அதெல்லாம் தெரியாது. சில நேரங்களில் அவன் எங்கள் குழந்தையா, நாங்கள் அவன் குழந்தைகளா என்று குழப்பம் வரும் அளவுக்கு எங்களை கவனித்துக்கொள்வான்’’ என்கிறார் ஸ்வெட்லனா.

ச்சோ ஸ்வீட் ஸ்டீபன்!

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் ‘ஸ்பேஸ்-அவுட்’ என்ற போட்டி நடத்தப்பட்டது. தொழில்நுட்பத்துக்கு அடிமையானவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியாளர்கள் 60 பேர் ஒரு பூங்காவில் அமர்ந்தனர். ஸ்மார்ட் போன், டேப்லட் போன்றவற்றை எடுத்து, எதிரில் வைத்தனர். 90 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல், யாரிடமும் பேசாமல் அமர்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் போட்டி. குறிப்பிட்ட இடைவெளிகளில் போட்டியாளர்களின் இதயத் துடிப்பு பரிசோதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கருவிகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாலும் யாருடைய இதயத் துடிப்பு இயல்பாக இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர்.

தென்கொரியாவில் 80% மக்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் 15% மக்கள் போனுக்கு அடிமையாகி வருகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணி நேரம் போனில் பேசுகிறார்கள், தகவல்கள் அனுப்புகிறார்கள், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள். இப்படி அடிமையாகிறவர்களின் உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இவர்களை மீட்பதற்காகவே ஸ்பேஸ்-அவுட் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள். அவர்களில் இருந்து 60 பேர் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ‘‘90 நிமிடங்களும் தூங்காமல், பேசாமல், அசையாமல், எதிரிலிருக்கும் எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா என்பதைத்தான் பரிசோதிக்கிறோம். போன், டிவி, கம்ப்யூட்டர் என்று நம் மூளை தொடர்ந்து அதிக வேலை செய்கிறது.

மூளைக்கு சிறிது நேரம் ஓய்வையும் மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கவே இந்தப் போட்டியை நடத்தி வருகிறோம்’’ என்கிறார் நிகழ்ச்சி அமைப்பாளர். ‘‘இந்தப் போட்டி நிச்சயம் என்னைக் கொஞ்சம் மாற்றிவிட்டது. 90 நிமிடங்கள் ஒரு வேலையும் செய்யாமல் போனைத் தொடாமல் என்னால் இருக்க முடிந்ததை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இனி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள இருக்கிறேன்’’ என்கிறார் ஒரு போட்டியாளர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

22 mins ago

வாழ்வியல்

46 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

20 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்