உலக மசாலா: இரு சக்கர மாட்டு வண்டி?

By செய்திப்பிரிவு

வியட்நாம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து பார்க்கும் ஒரு விஷயம் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களைத்தான். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதைத்தான், இவ்வளவுதான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியை எல்லாம் பின்பற்றாமல் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குள் நீந்திச் செல்லும் வளர்ப்பு மீன்கள், பலூன்கள், ராட்சத டியூப்கள், பறவைக் கூண்டுகள், விநியோ கிக்க வேண்டிய பொருட்கள், மரங்கள், பூச்செடிகள், காய்கறிகள், குளிர்பான பாட்டில்கள் என்று அளவுக்கு அதிகமான சுமைகளுடன் வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.

ஓட்டுபவருக்கு வசதியாக இந்தப் பயணம் இருப்பதில்லை. வண்டியின் பெரும் பகுதியைச் சரக்குகளே இடம்பிடித்து விடுகின்றன. ஆனாலும் சர்வசாதாரணமாக வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். வியட்நாமில் கார் விலை அதிகம் என்பதால் எல்லோரும் இரண்டு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். அதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். எப்பொழுதும் வாகனங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும்போதே அதிக விபத்துகளைச் சந்திக்கிறார்கள்.

ம்... ரிஸ்க்கான வாழ்க்கை…

சீனாவின் நான்ஜிங் பகுதியில் வித்தியாசமான புத்தகக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடையில் விற்பனை செய்வதற்கு ஆட்களே கிடையாது. பில் போட்டு, பணம் பெறுவதற்கும் கூட ஆட்கள் இல்லை. தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டு, அதற்குரிய பணத்தை ஒரு பெட்டியில் போட்டுவிட வேண்டும். இந்த ‘ஹானஸ்டி புக்ஸ்டோர்’ சமூகப் பரிசோதனைக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் நேர்மை, ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

1500 புத்தகங்களுடன் இந்தக் கடையை ஆரம்பித்தார்கள். முதல் நாள் 300 புத்தகங்கள் விற்பனையாகின. அந்த வார இறுதிக்குள் 800 புத்தகங்கள் விற்பனையாகிவிட்டன. இதுவரை ஒரு புத்தகம் கூடத் திருடப்படவில்லை என்பது முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு பரிசோதனை முயற்சியாக ஃபுஜியன் மாகாணத்தில் உணவு விடுதி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 20 சதவிகித வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்காமல் சாப்பிட்டுச் சென்றார்கள். இதில் 26 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளில் மக்களின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் என்று ஹானஸ்டி புக்ஸ்டோர் குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த மாதிரி முயற்சிகளை நாமும் செய்து பார்க்கலாமே...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவப்புத் தலைமுடியுடன் இருப்பவர்களைப் பற்றிக் கிண்டல் செய்துகொண்டிருந்தது உலகம். பாலூட்டிகளின் தோலுக்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுப்பது எம்சி1ஆர் என்ற புரதம்தான். இந்தப் புரதம் சரியாகச் சுரக்காதபோது சிவப்பு முடிகள் உருவாகுவதாகச் சொல்கிறார்கள். சிவப்பு முடி உடையவர்களுக்கான பிரத்யேகப் பத்திரிகை எம்சி1ஆர் என்ற பெயரில் வெளிவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஃபேஷன், தலையங்கம், பேட்டி, நாட்டு நடப்புகள் என அத்தனை விஷயங்களும் சிவப்புத் தலைமுடியை வைத்தே எழுதப்படுகின்றன.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ட்ரிஸ்டன் ரோட்ஜெர்ஸ், ‘‘முதலில் புகைப்படப் புத்தகமாக மட்டுமே கொண்டு வர நினைத்தோம். பின்னர் அது ஒரு முழுமையான பத்திரிகையாக மாறிவிட்டது. மிகக் குறைவான பிரதிகள்தான் அச்சடிக்கப்படுகின்றன’’ என்கிறார். 2014ம் ஆண்டு 1600 பிரதிகளுடன் ஜெர்மன் மொழியில் வெளிவந்தது எம்சி1ஆர் பத்திரிகை. சிவப்பு முடி இல்லாதவர்களும் இந்தப் பத்திரிகையை விரும்பினார்கள். அதனால் 2015ம் ஆண்டு ஆங்கிலத்தில் பத்திரிகை வெளிவந்தது. அதைப் பார்த்த பிறகு, ஏராளமானவர்கள் தங்கள் தலை முடியைச் சிவப்பாக மாற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ‘‘எல்லோரும் ஏளனம் செய்துகொண்டிருந்த ஒரு விஷயம், இன்று ஃபேஷனாக மாறிவிட்டது. அதற்கு எங்கள் பத்திரிகை முக்கியக் காரணம்’’ என்கிறார் ட்ரிஸ்டன்.

தவறான கருத்தை மாற்றிய ட்ரிஸ்டனுக்கு வாழ்த்துகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்