Published : 06 May 2024 07:02 PM
Last Updated : 06 May 2024 07:02 PM

“மாணவர்களின் கனவுக்கு மோடி அரசே சாபம்” - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங். காட்டம்

ராகுல் காந்தி

புதுடெல்லி: “நீட் வினாத்தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுக்கு செய்யும் துரோகம்” என பாஜக அரசு மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (மே 5) மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “நீட் வினாத்தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுக்கு செய்யும் துரோகம். 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகி விட்டது.

கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான சூழலை உருவாக்குவோம் என்பதுதான் எங்கள் உத்தரவாதம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், “மீண்டும் ஒருமுறை நீட் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வந்துள்ளன. நாட்டில் உள்ள 24 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தொடரும் இந்தப் போக்கு முடிந்தபாடில்லை. இதைப் பற்றி பிரதமர் ஏதாவது சொல்வாரா? நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டம் என்ன ஆனது? அதனால்தான் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவை இந்தத் தேர்தலில் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை காங்கிரஸ் சரிசெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறும்போது, “கடந்த 7 ஆண்டுகளில், 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதனால், 2 கோடிக்கும் மேற்பட்டவர்களின் எதிர்காலம் பாழாகியுள்ளது. பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவது தொடர்பாக சட்டம் இருந்தும், இன்னும் இது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. வினாத்தாள்கள் கசிவு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டித்தால் மட்டும் போதாது. எந்த ஒரு வினாத்தாளும் கசிந்து விடாமல் தடுப்பதே எங்களது நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

மறுப்பு: இதனிடையே, தேசிய தேர்வு முகமை இது குறித்து விளக்கமளித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பு நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை. சமூக வலைதளத்தில் கசிந்ததாக கூறப்படும் அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை. சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாளுக்கும் உண்மையான வினாத்தாளுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x