உலக மசாலா: 3 மணி நேரத்தில் உருவாக்கிய வீடு!

By செய்திப்பிரிவு

சீனாவில் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டை 3 மணி நேரங்களில் உருவாக்கி சாதித்துவிட்டனர். தொழில்நுட்பத்தில் இது மிகப் பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. மத்திய சீனாவில் இயங்கி வரும் ஸுவோடா கட்டுமான நிறுவனம் இந்தப் புதுமையைச் செய்திருக்கிறது. ஹால், அறைகள், சமையலறை, குளியலறை, மாடி என்று தனித்தனியாகத் தொழிற்சாலையில் உருவாக்குகிறார்கள். உருவாக்கிய அறைகளை க்ரேன் மூலம் கொண்டு வந்து, தேவையான இடத்தில் பொருத்தி விடுகிறார்கள். இந்த வீடுகளுக்கு சிமெண்ட் பயன்படுத்துவதில்லை.

அதற்குப் பதிலாக விலை மலிவான, அதிகம் உழைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு வீட்டை உருவாக்குகிறார்கள். இந்த வீடு குறைந்தது 150 வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். பூகம்பத்தால் கூட வீட்டுக்கு பாதிப்பு நிகழாது. நெருப்பு, தண்ணீர் போன்றவற்றாலும் பாதிப்புக்கு உள்ளாக முடியாது. முக்கியமாகச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் இதில் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். 90 சதவீதம் வீட்டைத் தொழிற்சாலையில் தயார் செய்துவிடுகிறார்கள்.

வீட்டின் உள் அலங்காரம், மின் இணைப்பு போன்றவை மட்டும் இறுதியில் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால் வீட்டுக்குள் மார்பிள், மரம், கிரானைட் போன்றவற்றால் கூடுதல் அலங்காரம் செய்து கொடுக்கிறார்கள். இந்த வீட்டின் சுவர்களில் இருந்து சீன மூலிகைகளின் நறுமணம் பரவுகிறது. செங்கல், சிமெண்ட் மூலம் கட்டும் வீட்டைப் போலவே உறுதியானது. ஒரு சதுர மீட்டரின் விலை சுமார் 36 ஆயிரம் ரூபாய். காப்புரிமை கிடைத்த பிறகு, வீட்டுக்குப் பயன்படுத்திய பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும்.

அருமை… ஆனால் விலைதான் அதிகம்…

பெண்கள் பயன்படுத்தும் நகப் பூச்சுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நெயில்ஸ்டார் என்ற சிறிய இயந்திரம் சில நொடிகளில் அழகாக நகப்பூச்சு செய்து விடுகிறது. இயந்திரத்தில் உள்ள திரையில் விதவிதமான நகப்பூச்சு வடிவங்கள் இருக்கின்றன. வேண்டியதைத் தேர்ந்தெடுத்து, பட்டனை அழுத்திவிட்டு, விரல்களை வைத்தால் சில நொடிகளில் நகங்களில் அந்த உருவங்கள் வந்துவிடுகின்றன. கொரியாவைச் சேர்ந்த ஒரு பெண் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். 6,60,000 தடவை இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது.

எல்லாத்துக்கும் இயந்திரமா…

கடல்வாழ் பறவை சீகல். கடலின் மேலே பறந்து திரிந்துகொண்டே இருக்கக்கூடியவை. திடீரென்று மீன்களோ, மிதவை உயிரினங்களோ கண்களில் பட்டால், தண்ணீருக்குள் பாய்ந்து சென்று உணவைப் பிடித்துகொண்டு மேலே வந்து, இரையாக்கிக்கொள்கின்றன. கில்லர் சீகல் பறவைகள் மீன்கள், இறால்கள், தவளைகளை மட்டுமல்ல பறவைகளையும் பிடித்துச் சாப்பிடக்கூடியவை. சின்னஞ் சிறு பறவையைக் கொத்தி, உயிர் இழக்கச் செய்து, அப்படியே முழுப் பறவையையும் வாய்க்குள் முழுங்கிய காட்சியை ஸ்காட்லாந்து புகைப்படக்காரர் டோகி மெக்கோல் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

ஒரு சின்னப் பறவையின் வாய்க்குள் எப்படி இவ்வளவு பெரிய இரை உள்ளே போகிறது!

சீனாவின் பெய்ஜிங்கில் இயங்கி வருகிறது சாலட் ஸ்வீட்டி உணவு விடுதி. இந்த விடுதியின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்திலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் விதத்திலும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது உணவு விடுதி. ஸ்பர்டன் வீரர்களைப் போல தோலால் செய்யப்பட்ட குறைந்த அளவு ஆடைகளுடன் 100 வெளிநாட்டினர் வீதிகளில் சுற்றி வந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் கூட்டம் கூடிவிட்டது. சீனக் காவலர்கள் எவ்வளவோ சொல்லியும் வீரர் வேடம் போட்டவர்கள் கேட்கவில்லை. நூறு பேரையும் கைது செய்தது காவல்துறை. உணவு விடுதியின் நிர்வாகிகள் தங்கள் தவறுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். ‘’ஓராண்டு நிறைவை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்தோம். எங்கள் உணவைச் சாப்பிடுகிறவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று காட்டவே இந்த ஆடைகளைப் பயன்படுத்தினோம்’’ என்கிறார் உணவு விடுதியின் உரிமையாளர்.

ம்… நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்