நிதி அமைச்சருடன் பள்ளிக்கல்வி அமைச்சர் கலந்தாலோசனை: பழுதான வகுப்பறைக்குப் பதில் 2,500 புதிய வகுப்பறை

By செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான நிதியை விரைந்து விடுவிப்பது தொடர்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்தாலோசனை செய்கிறார். இதற்கான நேரடி சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று அல்லது நாளை நடைபெறுகிறது.

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உயர் முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 34 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7 ஆயிரத்து 500 திறன் வகுப்பறைகள், ரூ.210 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2 ஆயிரத்து 713 நடுநிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ரூ.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

ஏற்கெனவே அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட 16 விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்த பல பெற்றோர் கரோனா சூழலுக்கு பிறகு அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தொடங்கியுள்ளனர்.

இதனால்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக மண்டல அளவிலும் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி களநிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும்பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான நிதியை விரைந்து விடுவிப்பது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் சந்தித்து கலந்தாலோசனை செய்ய உள்ளார். இதற்கான சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று அல்லது நாளை நடைபெறவிருக்கிறது.

இந்த சந்திப்பின்போது, அரசு பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட்ட வகுப்பறைகளுக்கு பதில் புதிதாக 2500 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது, மாதிரி பள்ளிகளில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம், மாதிரி பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை நிரந்தரமாக்குவது, தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்குவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பிளஸ்1 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது, அரசு உதவி பெறும்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஒப்புதல், அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவது, தகைசால் பள்ளிகளுக்குத் தேவைப்படும் ரூ.171 கோடி, தமிழ்வழியில் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அரசு பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்கள் போன்றவை குறித்து நிதிஅமைச்சருடன் அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிக்கல்வித்துறையில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதியை விரைந்து விடுவிக்குமாறும் நிதி அமைச்சரிடம் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ந.முருகானந்தம், அத்துறையின் உயர் அதிகாரிகளும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி மற்றும் இதர இயக்குநர்களும் கலந்துகொள்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

42 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்