இலவசப் பேருந்தில்லை; காலை, மதிய உணவில்லை, அரிசியுமில்லை: தவிக்கும் புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் சூழலில் காலை, மதிய உணவுகள் கரோனாவைக் காரணம் காட்டித் தரப்படுவதில்லை. அக்குழந்தைகள் நெடுந்தொலைவிலிருந்து வர இலவசப் பேருந்தும் இயங்குவதில்லை. உணவு உறுதித் திட்டத்தில் அரிசியும் வழங்கப்படாததால் புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

கரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பெற்றோர்கள் அனுமதியுடன் சந்தேகத்தைத் தீர்க்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. டிசம்பர் மாதத் தொடக்கத்தில், 2021 ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று கல்வித்துறை அறிவித்தது.

கடந்த ஜனவரி 18-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. அரை நாள்தான் பள்ளி என்பதால் அவர்களுக்கான உணவைப் புதுச்சேரி அரசு தருவதில்லை.

இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரியிலுள்ள ஒரு அரசுப் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு, 'பள்ளியில் சாப்பாடு போடுவதில்லை- பசி எடுக்குது சார்' என்று அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுவன், வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்ற ஆசிரியரிடம் கூறுகிறார்.

இதுபற்றி ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, "மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் நாராயணசாமி, கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று அறிவித்துத் தொடங்கிய திட்டம் அதன்பிறகு பள்ளி திறக்கும்போது செயல்படும் என்றார்கள். தற்போது பள்ளிகள் தொடங்கிய பிறகும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

அனைத்துப் பள்ளிகளையும் திறந்துவிட்ட அரசு, ஏழை மாணவர்களின் உணவைப் பற்றிக் கவலைப்படவில்லை. தற்போது பள்ளிகள் மதியம் 12.30 மணிக்கு முடிகின்றன. மாணவர்களுக்கான இலவசப் பேருந்துகளையும் அரசு இன்னும் இயக்கவில்லை. பலர் நெடுந்தொலைவு பசியுடன் பயணிக்க வேண்டியுள்ளது. பள்ளிக்கு வந்தும் பல குழந்தைகள் பசியுடன் திரும்பிச் செல்லும் சூழலே உள்ளது" என்றனர்.

இதுபற்றிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடுவிடம் கேட்டதற்கு, "நாடு முழுவதும் எங்குமே கரோனாவால் மதிய, காலை உணவுத் திட்டம் தொடங்கப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு உத்தரவாதம் தர முதல் கட்டமாக அரிசி தந்தீர்கள். தொடர்ந்து தராதது ஏன் என்று கேட்டதற்கு, "முதல் கட்டமாகத் தந்தோம். இரண்டாவது கட்டமாக அரிசி தர ஒப்புதல் கிடைத்துள்ளது. அடுத்த வாரம் தந்துவிடுவோம்" என்றார்.

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான இலவசப் பேருந்து வசதியை இன்னும் தொடங்கவில்லையே என்று கேட்டதற்கு, "டெண்டர் கோரியுள்ளோம். அது நிறைவடைந்த பிறகுதான் நடைமுறைக்கு வரும்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

15 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

9 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

23 mins ago

வலைஞர் பக்கம்

27 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

48 mins ago

மேலும்