Published : 29 Apr 2024 11:41 AM
Last Updated : 29 Apr 2024 11:41 AM

"தேர்தல் சமயத்தில் சி.ஏ தேர்வுகள்; மாணவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிப்பு" - வைகோ குற்றச்சாட்டு

வைகோ

சென்னை: மக்களவைத் தேர்தல் நடைபெறும் கால இடைவெளியில் சி.ஏ. தேர்வுகள் நடைபெறுவது, இந்திய அரசியலமைப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மே 2-ம் தேதி தொடங்கவிருக்கும் பட்டயக் கணக்கியல் (சிஏ) தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தி, சிஏ மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இன்று ஏப்ரல் 29 இல், இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மனுவில், மக்களவைத் தேர்தலில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தேர்வுகளை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கல்விக் கடமைகள் தொடர்பான நாடு தழுவிய விவாதங்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தல் தேர்தல் நடைபெறும் கால இடைவெளியில் சி.ஏ தேர்வுகள் நடைபெறுவது, இந்திய அரசியலமைப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாகும். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கு (ICAI) மாணவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் இது குறித்து இடைவிடாத அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.

இதேபோன்ற மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து இருந்த போதிலும் 4,46,000 க்கும் மேற்பட்ட சிஏ மாணவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதி கொண்டு தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கல்விச் சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு சிஏ படிக்கும் மாணவர்களுக்கான பரப்பை வடிவமைக்கும் கல்வி நோக்கங்களுக்கும், ஜனநாயகப் பொறுப்புகளுக்கும் இடையிலான நுட்பமான சமநிலையை உருவாக்கும்.

நாட்டின் தேர்தல் நடைமுறை நோக்கில் கல்வி மற்றும் ஜனநாயகத்தின் நலன்களை சமநிலைப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x