மாணவர்களின் திறமைக்கு பொதுத்தேர்வுகள் அளவுகோல் இல்லை; பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்காமல் ஆதரவு தர வேண்டும்: பெற்றோர்களுக்கு கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அழுத்தம் தந்து அச்சுறுத்தாமல் பெற்றோர் ஆதரவாக இருக்க வேண்டும் என கல்வியாளர்களும், நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதமும், 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதமும்பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மறுபுறம் மாணவர்களும் தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வை முன்னிட்டு தொலைக்காட்சி இணைப்பை துண்டித்ததால் பெற்றோருடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் மாணவர் தவறான முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வு தொடங்கும் முன்பே நடைபெற்ற இந்தசம்பவம்பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொதுத்தேர்வு காலமான தற்போது பிள் ளைகளுக்கு ஆதரவாக பெற்றோர் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து உளவியல் நிபுணர் எஸ்.அபிலாஷா கூறியதாவது:

ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தில் இருப்பார்கள். இந்தச் சூழலில் பெற்றோர்,குழந்தைகள் மீது மேலும் அழுத்தத்தை திணிக்காமல் அவர்களுக்கு சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லக் கூடாது. தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம் முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி செல்போன் பயன்பாட்டை தவிர்க்கட வேண்டும். கண்டிப்பு காட்டுவதை விட்டு அன்பாக பேசி ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில், குழந்தைகளின் மனதில் தவறான எண்ணங்கள் உருவாகி அதை நோக்கி அவர்கள் நகரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் செல்வகுமார் கூறும்போது, ‘‘தேர்வில் தோல்வி பயம், மனஅழுத்தம் உட்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தவறான முடிவுகளை நோக்கி தள்ளப்படுகின்றனர். மதிப்பெண்கள் ஒருபோதும் பிள்ளைகளின் திறமைக்கு அளவுகோல் கிடையாது. அதனால் பெற்றோர்கள் முதலில் தங்களின் தேர்வு பயத்தை போக்க வேண்டும். தேர்வுக்கு தயாராக தேவையான வசதியை செய்து தந்து, பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மேலும், பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும்’’என்றார்.

இது வெறும் தேர்வுதான்

இதற்கிடையே சவுதி அரேபியாவின் தமாம் நகரில் இயங்கும் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளிமுதல்வர் சுபைர் அகமது கான்,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோருக்கு எழுதிய கடிதம் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘‘விரைவில் பொதுத்தேர்வுகள் தொடங்கப்போகின்றன. உங்கள் குழந்தை நன்றாக எழுத வேண்டும் என பதற்றத்துடன் இருப்பீர்கள். எனினும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கலைஞராகும் திறனுடைய மாணவனுக்கு கணிதம்தேவையில்லை.

தன்னம்பிக்கை அவசியம்

தொழிலதிபருக்கு வேதியியல் மதிப்பெண்கள் அவசியமில்லாத ஒன்று. உங்களின் குழந்தை அதிக மதிப்பெண் பெற்றால் நல்லது. ஒருவேளை பெறாவிட்டால் அவர்கள் தன்னம்பிக்கையை சிதைத்துவிடாதீர்கள். பரவாயில்லை, இது வெறும் தேர்வுதான் வாழ்வில் இதைவிட பெரிய நிகழ்வுகள் உள்ளதை எடுத்துக்கூறுங்கள். ஒரு தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடாது. மேலும், மருத்துவர்கள், பொறியாளர்கள் மட்டுமே உலகில் மகிழ்ச்சியாக உள்ளனர் என தயவு செய்து நீங்கள்நினைக்காதீர்கள்'' என்று கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

சினிமா

13 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்