Published : 30 Apr 2024 05:59 PM
Last Updated : 30 Apr 2024 05:59 PM

கோஷ்டிகளால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு: மைக்கேல் கிளார்க் அடுக்கும் காரணங்கள்

எப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு வந்தாரோ, அதுவும் கேப்டனாக ஆனாரோ அதுமுதல் அவருக்கு செல்லும் இடமெல்லாம் அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது. மும்பையிலும் ஆதரவு இல்லை. அகமதாபாத் சென்றால் காறி உமிழாத குறைதான். இதோடு மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே கோஷ்டிகள் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 அட்டவணையில் 9வது இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மைக்கேல் கிளார்க் பகிர்ந்தவை: “இந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருமே மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை அவரவர் சொந்த விருப்பங்களுக்கேற்ப நடக்கிறதேயன்றி அணியாக திரண்டு ஆடவில்லை.

நாம் வெளியே பார்ப்பதை விட அதிகமாக ஓய்வறையில் ஏதோ சிக்கல்கள் இருந்து கொண்டிருக்கிறது போல் தெரிகிறது. இல்லையெனில், இத்தனை நல்ல வீரர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு மோசமாக ஆட முடியுமா?. ஓய்வறையில் வீரர்களிடையே கோஷ்டிப் பிளவு இருப்பதாகவே தெரிகிறது. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அவர் சேர்ந்து ஆட முடியாமல் ஏனோதானோவென்று ஆடி வருகின்றனர்.

தனிப்பட்ட வீரரின் சிறப்பான ஆட்டம் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரலாம். ரோஹித் சர்மா இன்னொரு சதம் அல்லது ஹர்திக் பாண்டியாவின் சதம், அல்லது பும்ரா வந்து பயங்கரமாக வீசுவது என்று ஏதாவது தனிப்பட்ட வீரர்களின் திறமையினால் ஏதாவது அங்கு நடந்தால்தான் உண்டு என்கிற அளவில்தான் மும்பை உள்ளது.

பெரிய தொடர்களை வெல்ல அணியாக திரண்டெழ வேண்டும். தனிப்பட்ட வீரர்களின் திறமை போதாது. ஒரு அணியாக அவர்கள் ஆடவில்லை. திரண்டெழுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இன்றைய போட்டியில் அவர்கள் வெல்வார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

இன்று மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் தான் மும்பை வெல்லாது என்கிறார் கிளார்க்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x