பின்லாந்து நாட்டின் கல்வித் துறை உதவியுடன் 8-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பயிற்சி அளிக்க திட்டம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

By சி.பிரதாப்

பின்லாந்து நாட்டின் கல்வித்துறை உதவியுடன் 8-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் பின்லாந்துக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

அப்போது அங்குள்ள ஆசிரியர்கள் உபகரணங்கள் உதவியுடன் செயல்வடிவ முறையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தரும் விதம் குழுவினரைக் கவர்ந்தது. இதையடுத்து தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க பின்லாந்து கல்வித் துறையிடம் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். அதையேற்று பின்லாந்தில் இருந்து 6 பேர் கொண்ட கல்விக் குழுவினர் கடந்த நவம்பர் மாதம் தமிழகம் வந்தனர். இக்குழுவினர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அதன்பின் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர் 29-ல் நாடு திரும்பினர். அடுத்தகட்டமாக பின்லாந்து கல்விக் குழு உதவியோடு 8-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பின்லாந்து நாட்டின் 6 பேர் கொண்ட கல்விக் குழுவினர் தமிழகம் வந்தனர். இவர்கள் முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 150 ஆசிரியர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான முறையில் மாணவர்களிடம் கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். அதில் மாணவர்களை செயல்வழி கற்றலுக்கு தயார்படுத்துவது, கற்றலில் பின்தங்கியவர்களை மேம்படுத்தும் வழிமுறைகள் விளக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து தற்போது பயிற்சி பெற்றவர்கள் மூலம் பிறமாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இது மாணவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருக்கும். இதற்காக பின்லாந்து குழுமீண்டும் தமிழகம் வரவுள்ளது.

மேலும், பின்லாந்து குழுவினர் வழங்கிய ஆய்வறிக்கையில் பள்ளிகளின் உட்கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான கருத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சாத்தியமான பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக நம் குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்லாந்து கல்விக் குழுவைச் சேர்ந்த வில்லே டாஜமா கூறிய தாவது:

தமிழகத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, அரசு மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது. புதிய பாடத்திட்டத்தின் சில பகுதிகளை ஆய்வு செய்தோம். அவை சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் திறமையானவர்களாக இருக்கின்றனர்.

அதேநேரம் மாணவர்களின் திறன்களை வளர்தெடுக்க கற்பித்தல் வழிமுறைகளில் புதுமைகளை புகுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், பாடம் கற்பிக்கப்படும் முறைகளில் செய்யும் மாற்றங்களே கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும்.

மேலும், மாணவர்களுக்கு தொடக்கக் கல்வியே அடித்தளம். அதை சிறந்த முறையில் கட்டமைக்க உதவினாலே மாணவர்கள் திறன் பெற்றவர்களாக தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் இடைவெளி விட்டு பாடம் நடத்த வேண்டும்.

கற்பித்தல் பணிகள் இடையே மாணவர்களுடன் அவ்வப்போது உரையாடி கொண்டே இருக்கவேண்டும். கற்பித்தல் முறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியானதாகவும் எளிமையானதாகவும் இருக்கவேண்டும். இவற்றில்கவனம் செலுத்த பயிற்சியில் ஆசிரியர்களிடம் வலியுறுத்தி யுள்ளோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்