Published : 29 Apr 2024 06:28 PM
Last Updated : 29 Apr 2024 06:28 PM

“நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற மோடி முயற்சி” - முத்தரசன் விமர்சனம்

முத்தரசன் | கோப்புப் படம்

சென்னை: “மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி விட வேண்டும் என்கிற பேராசையில் நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்று முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைக்கான 18-வது பொதுத் தேர்தல் இரண்டு கட்டங்கள் முடிந்து விட்டன. அடுத்த மூன்றாம் கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ல் முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான பரப்புரையை அனைத்துக் கட்சிகளும் மேற்கொண்டுள்ளன. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக இல்லை என்பதனை நன்கு உணர்ந்துள்ள மோடி தோல்வியை சகித்துக் கொள்ள இயலாத மனநிலையில், அரசியல் அமைப்பில் தான் வகித்து வரும் மிக உயர்ந்த பொறுப்பான ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் என்பதனை முற்றாக மறந்து, தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.

மூன்றாவது முறையாக எப்பாடு பட்டாவது பிரதமர் ஆகி விடவேண்டும் என்கிற பேராசையில், நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்று முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிரதமரின் பரப்புரைக் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது மக்களும், அறிஞர் பெருமக்களும், ஊடகங்களும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையிலும் பிரதமர் தனது வெறி பிடித்த பரப்புரையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருவது தேர்தல் பிரச்சாரம் அல்ல, மாறாக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி நாட்டையே பிளவுபடுத்தும் தேசவிரோதச் செயலாகும். ஒன்றுபட்ட இந்தியா மதவெறியின் காரணமாக இரண்டாகி பின் மூன்றானது. (இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ்) தற்போது மோடி மேற்கொண்டுள்ள பிரச்சாரம் மேலும் நாட்டை பிளவுபடுத்தும் பேராபத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பிரதமரின் கண்ணியமற்ற தீய உள்நோக்கம் கொண்ட பரப்புரை குறித்து நடவடிக்கை எடுத்திட வேண்டிய பொறுப்பு வாய்ந்த தேர்தல் ஆணையம் அமைதி காப்பது மிகக் கவலைக்குரியது. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலகத்தை தூண்டி வருகின்றனர். எங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருவதை பிரதமரின் பரப்புரைகள் உறுதி செய்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்பான மதச்சார்பின்மை, ஜனநாயகம் அனைத்தையும் சவக்குழிக்கு அனுப்பும் பிரதமரின் சிறுமைத்தனமான செயலை நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முறியடித்து நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு உறுதியாக நம்புகிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x