Last Updated : 29 Apr, 2024 08:50 PM

2  

Published : 29 Apr 2024 08:50 PM
Last Updated : 29 Apr 2024 08:50 PM

அடர் வனமாக மாறி வரும் தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு!

படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: ஒரு காலத்தில் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு, தற்போது அடர் வனமாக மாறி வருகிறது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக இந்த பகுதி மாறியுள்ளது.

குப்பை கிடங்கு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு தூத்துக்குடி- தருவைகுளம் சாலையில் அய்யனார்புரம் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 526 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கு ஒரு காலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்து வந்தது. துர்நாற்றம் மற்றும் குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு உருவாகும் புகையால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன.

ஆனால், அந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதியில் முதன் முதலில் 2 ஏக்கர் நிலத்தில் மட்டும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றி, அந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு அப்போதைய மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் நடவடிக்கை எடுத்தார். 2 ஏக்கரில் சுமார் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

130 ஏக்கரில் காடு: இந்த மரங்கள் நன்கு வளரத் தொடங்கியதை தொடர்ந்து, அடுத்தடுத்து குப்பைகள் அழிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுவரை இந்த பகுதியில் மியாவாக்கி முறையில் 130 ஏக்கரில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதில் 2019-ம் ஆண்டில் நடப்பட்ட மரங்கள் சுமார் 15 அடி உயரத்துக்கு வளர்ந்து சோலையாக காட்சியளிக்கிறது. இதில் கொய்யா, மாதுளை, கொடுக்காபுளி போன்ற பழமரங்கள் பலன் கொடுக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து நடப்பட்ட மரங்கள் அடுத்தடுத்த நிலைகளில் வேகமாக வளர்ந்து வருகின்றன. கனி தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள், மரத்தடி தரும் மரங்கள், காய்கறி, பூச்செடிகள், மூலிகை செடிகள் என சுமார் 300 வகையான மரங்கள் மற்றும் செடிகள் இங்கே நடப்பட்டுள்ளன.

பறவைகளுக்கு புகலிடம்: தூத்துக்குடி பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த காடு, பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.

இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வரும் மாநகராட்சி சுகாதார அலுவலர் வி.அரிகணேஷ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: “மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் உயிர் பல்வகைமை பூங்கா (பயோ டைவர்சிட்டி பார்க்) அமைக்க மாநகராட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வல்லுநர் குழு மூலம் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இந்த பகுதியில் மரம், செடி கொடிகள் சரியாக வளராது. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என வல்லுநர் குழுவினர் தெரிவித்தனர். ஆனால், அந்த கருத்து தவறானது என்பதை தற்போது நிருபித்திருக்கிறோம். இங்கு மரம், செடி, கொடிகள் மிக மிக நன்றாக செழித்து வளருகின்றன. அதன் மூலம் பல உயிரினங்களுக்கு இப்பகுதி புகலிடமாக மாறியுள்ளது.

ஏராளமான மயில்கள் இங்கே வாழ்கின்றன. அவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஏற்ற பகுதியாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளன. ஏராளமான பறவைகள் இங்கு வாழ்கின்றன. தற்போது புதிதாக பல பறவைகள் வந்துள்ளன. மேலும், முயல், எலி, பாம்பு போன்ற வனவிலங்குகளும், ஏராளமான சிறிய உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

கொடி கம்பங்கள்: 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களை அகற்றினோம். அந்த கொடி கம்பங்கள் தான் இந்த பகுதியில் வேலி அமைக்க மூலப்பொருளாக பயன்பட்டன. மேலும், பல உபயதாரர்களிடம் வலைகளை வாங்கி வேலி அமைத்தோம்.

மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் மரக்கன்று நடுவதில் மிகுந்த ஆர்வத்தோடு ஊக்கப்படுத்தி வருகின்றனர். வனத்துறை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள். இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிகளை செய்து வருகின்றனர். அனைவரின் கூட்டு முயற்சியால் தான் இந்த காட்டை உருவாக்கியுள்ளோம்.

தேனீ வளர்ப்பு: முதலில் நட்ட மரங்கள் பலன் கொடுக்க தொடங்கியுள்ளன. இதில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை இங்கே பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், தேனீ வளர்ப்பு பணியும் இங்கே மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் நல்ல பலன் கிடைத்துள்ளது.

இந்த பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு தான் மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறோம். மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெறும். இப்பகுதி முழுவதையும் அடர்ந்த காடாக மாற்றுவே மாநகராட்சியின் நோக்கம்” என்றார் அவர்.

மேயர் ஆர்வம்: மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நடும் பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தூத்துக்குடி நகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல திட்டங்களை அவர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு, பொறுப்பேற்று 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு மேயர் ஏற்பாடு செய்தார்.

அதுபோல இந்த ஆண்டு 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 71 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கடந்த மாதம் தொடக்கத்தில் மேயர் தொடங்கி வைத்தார். அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேயரின் முயற்சியால் தூத்துக்குடி விரைவில் பசுமையாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தனர் மாநகராட்சி அதிகாரிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x