துரை வைகோவுக்கு கட்சிப் பதவி - மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் : கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு : மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை தொடங்குகிறார்

By டி.ஜி.ரகுபதி

துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ள சூழலில், மதிமுகவில் இருந்து விலகுவதாக, மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திமுக சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில், மதிமுக தலைமை நிலைய செயலராக துரை வைகோ நியமிக்கப்பட்டார். இதனால், வாரிசு அரசியலை எதிர்த்து தான் சார்ந்து இருந்த திமுகவில் இருந்து விலகி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து மதிமுகவை தொடங்கிய வைகோ, தற்போது வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேசமயம், ‘வாரிசு அரசியல்என்பது ஒருவரை கொண்டுபோய் திணிப்பது. ஆனால், துரை வைகோவுக்கு தொண்டர்களின் விருப்பப்படியே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பில் 104பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்’ என வைகோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கிடையே, துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கியதற்கு, முதல் ஆளாக கோவையைச் சேர்ந்த மாநில நிர்வாகியிடம் இருந்தே எதிர்ப்புக் குரல் கிளம்பிஉள்ளது. கோவையைச் சேர்ந்த வே.ஈஸ்வரன், மதிமுக மாநிலஇளைஞரணிச் செயலராக பதவிவகித்து வந்தார். அரசியல் கட்சிபோராட்டங்களைத் தவிர, பொதுமக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார்.மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் வே.ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கியநிர்வாகிகள் சிலர் கலந்து கொள்ளவில்லை. இச்சூழலில், மதிமுகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வே.ஈஸ்வரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறும்போது, ‘‘நான் கடந்த 28 ஆண்டுகளாக, எனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்து மதிமுகவில் பணியாற்றி வந்தேன். மதிமுகவில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றியச் செயலாளர், கோவை மாவட்டச் செயலாளர், மாநில இளைஞர் அணி செயலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். பெருந்துறை இடைத்தேர்தல் முதல், இறுதியாக பல்லடம் சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். என் பொது வாழ்வில் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி, கடுகளவு கூட நான் பலன் அடைந்ததுஇல்லை. அரசியலை எனது சுயலாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது என்பது என் முக்கிய கொள்கை.

மதிமுகவில் துரை வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவது என பெரும்பான்மையானோர் எடுத்த முடிவு எனது கருத்துக்கு எதிரானது. இந்த கருத்து வேறுபாட்டுடன் கட்சியில் பயணிப்பது எனக்கும் நல்லதல்ல. கட்சிக்கும் நல்லதல்ல. கட்சியில் யார் வேண்டுமானலும் இணையலாம். யாருக்கு வேண்டுமானாலும் பொறுப்பு வழங்கலாம். ஆனால், அவர்தான் அடுத்து கட்சியை வழிநடத்துபவர் என பொதுச்செயலர் அறிவிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அதை அப்போதைய சூழலில் பார்த்துக் கொள்ளலாமே.

மேலும், தனக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடப்பதாகவும், கட்சி தனது கட்டுப்பாட்டில் இல்லை எனவும் பொதுச்செயலர் தெரிவித்துள்ளார். துரை வைகோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவது சரியான நடைமுறை இல்லை என்ற என் கருத்தை, நான் பொதுச்செயலரிடம் நேரடியாக தெரிவிக்காவிட்டாலும், மூத்த நிர்வாகிகள் மூலம் முன்னரே தெரிவித்துவிட்டேன். எனவே, இதுபோன்ற இடர்பாடான காரணங்களால் மதிமுகவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன். இதையறிந்தும், கட்சி தலைமையில் இருந்து யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. எனது போராட்டங்களையும், மக்கள் பணிகளையும் தொடர, ‘மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்’ என்ற இயக்கத்தை தொடங்க உள்ளேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்