அதிமுக ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார் : முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்

By செய்திப்பிரிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(66) மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்றுகாலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில்திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக இதயநோய் நிபுணர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பிறந்த விஜயலட்சுமி, ஓ.பன்னீர்செல்வத்தை திருமணம் செய்த பிறகு பெரியகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஓபிஎஸ் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு கவிதாபானு என்ற மகளும், ஜெயபிரதீப், ரவீந்திரநாத் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

விஜயலட்சுமி இறந்த தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, கதறி அழுத ஓபிஎஸ் கைகளை முதல்வர் ஸ்டாலின் பற்றிக்கொண்டு ஆறுதல் கூறினார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராஜ், சி.வி.சண்முகம், செல்லூர் கே.ராஜூ, பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் சபாநாயகர் தனபால், பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளும் ஓபிஎஸ்-க்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதிசீனிவாசன், பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நடிகர் பிரபு உள்ளிட்டோர் நேரில் ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து விஜயலட்சுமியின் உடல்முற்பகல் 11.25 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக சசிகலா, ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநர் விவேக் ஆகியோர் 12.20 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை ஓபிஎஸ்ஸின் மகள் கவிதாபானு, 6-வது தளத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த ஓபிஎஸ், சசிகலாவைப் பார்த்ததும் கண்ணீர் சிந்தினார். அவரது கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ரவீந்திரநாத் குமார் எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் அரை மணிநேரம் அங்கிருந்த சசிகலா, 12.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர், ஓபிஎஸ் உள்ளிட்ட குடும்பத்தினர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். விஜயலட்சுமியின் உடல் நேற்றிரவு பெரியகுளம் வந்தடைந்தது. தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உறவினர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் இரவு முழுவதும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என ஓபிஎஸ் குடும்பத்தினர் கூறினர்.

முதல்வர், தலைவர்கள் இரங்கல்

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இல்லத் துணையை பிரிந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், ஐயுஎம்எல் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்