கரோனா மரணங்களை மறைக்கிறது - தமிழக அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை : முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

By செய்திப்பிரிவு

தமிழக அரசு கரோனா மரணங்களை மறைக்கிறது. கரோனா தொடர்பான அரசின் செயல்பாட்டில் எதிர்க்கட்சியான எங்களுக்கும், மக்களுக்கும் திருப்தி இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எந்த சலசலப்பும், பரபரப்பும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல மற்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்குமாறு பிரதமரிடம் ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசை குறை சொல்வதைவிட, மாநில அரசு 39 எம்.பி.க்களை வலியுறுத்துமாறு கூறி காரியத்தை சாதிக்க வேண்டும்.

தமிழகத்தில் தினமும் 400-க்கும்மேற்பட்டவர்கள் கரோனாவால் இறக்கின்றனர். கரோனா குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். பரிசோதனைகள் செய்தால்தானே தெரியும். அரசு வீண் விளம்பரங்களை தவிர்த்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். உண்மையான இறப்பு எண்ணிக்கையை இந்த அரசு மறைக்கிறது.

நாங்கள் எதிரிக்கட்சி அல்ல; எதிர்க்கட்சி. அரசின் நல்ல விஷயங்களுக்கு ஆதரவு உண்டு. அரசு திசைமாறி செல்லும்போது சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. கரோனா விஷயத்தில் அரசின் செயல்பாட்டில் எங்களுக்கும் மக்களுக்கும் திருப்தி இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘ஓபிஎஸ் இல்லாமல் முடிவெடுத்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம் என திருநெல்வேலியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறி யார் நடந்து கொண்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கட்சியை வழிநடத்தும் சூழலில், திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசுவதற்கு இடம் தரக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

ஜூன் 14-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்

எதிர்க்கட்சி துணைத்தலைவர், அதிமுக கொறடாவைத் தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இக்கூட்டத்தை நடத்த அனுமதி கோரி, டிஜிபி அலுவலகம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி தேர்வு செயயப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோரைத் தேர்வு செய்ய, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி 12 மணிக்கு நடைபெறுகிறது.

கரோனா தாக்கம் இருப்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முறைப்படி அனுமதி பெற்று கூட்டம் நடத்துவதற்காக, அதிமுக சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடமும் மனு கொடுக்கப்படுகிறது. கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நாங்கள் செயல்படுவோம் என்ற உத்தரவாதத்தை மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்