சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை நவ.15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை இம்ம்மாதம் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் முதலமைச்சர் 2022-23ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், pmfby.gov.in என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர்" எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு விவசாயிகளின் நிதிச்சுமையினை பெருமளவு குறைக்கும் வகையில், காப்பீட்டுக் கட்டணத் தொகையில் பெரும்பங்கு மாநில அரசும், ஒன்றிய அரசும் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகள் சம்பா நெல், மக்காச்சோளத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையையும், பருத்தி, வெங்காயத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதத் தொகையையும் செலுத்தினால் போதுமானது. விவசாயிகளின் பங்களிப்புக் கட்டணத்தை செலுத்தியதற்கான இரசீதை பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களையோ அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது வங்கிகளையோ அணுகலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்