ஸ்வச் சர்வெக்சான் திட்டத்தை மக்களிடம் விளம்பரப்படுத்த கோவை மாநகராட்சி முடிவு

By ர.கிருபாகரன்

மத்திய அரசு அதிகாரிகளின் ஆய்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டப் பணிகளை வேகப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தூய்மையை மையப்படுத்தி கொண்டு வரப்பட்டுள்ள ஸ்வச் சர்வெக்சான் (swachh survekshan 2017) திட்டத்தை நாடு முழுவதும் 500 நகரங்களில் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதில், ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் உள்ள நகரங்களும் இடம் பெற்றுள்ளன. திறந்தவெளிக் கழிப்பிடத்தை முற்றிலுமாக ஒழித்து, தனிநபர் கழிப்பிடங்களை அமைத்துக் கொடுப்பது, உள்ளாட்சி நிர்வாகங்களையும், பொதுமக்களையும் உள்ளடக்கிய சுகாதாரத் தூய்மை ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டப் பணிகள் குறித்து நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 73 நகரங்களில் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கோவை உள்ளிட்ட நகரங்களில் ஆய்வு நடத்தப்படும் என கூறப்படுகிறது. எனவே, கோவை மாநகராட்சியில் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டவும், சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த புகார்கள் மீதும் தீவிர கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

1500 கழிப்பிடங்கள்

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘2019-ம் ஆண்டுக்குள் 100 வார்டுகளிலும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற இலக்கு உள்ளது. அதில் 6056 பேர் விண்ணப்பித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி மற்றும் தனியார் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றின் கீழ் தலா ரூ.12 ஆயிரம் செலவில் இந்த கழிப்பிடங்கள் கட்டித் தரப்படுகின்றன. கோவையின் இந்த ஆண்டுக்கான இலக்கு 2011 கழிப்பிடங்கள். அதில் தற்போது வரை 1500 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கழிப்பிடங்களை விரைவில் கட்டிக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மத்திய அரசு அதிகாரிகளின் ஆய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பணிகளை வேகமாக முடிக்க முயற்சிக்கிறோம். சரியாக பணிகள் நடக்காத பகுதிகளில் ஆய்வு செய்து 13 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தனிநபர் கழிப்பிடம், நகரத் தூய்மை ‘ஸ்வச்சட்டா’ செயலியில் பொதுமக்கள் செயல்பாடு ஆகியவற்றையும் மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்’ என்றார்.

மாநில அரசின் ஈடுபாடு

‘ஸ்வச் சர்வெக்சான்’ மத்திய அரசு திட்டம் என்பதால், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. ஆனால், மக்களிடம் இத்திட்டம் மீதான விழிப்புணர்வும், பயன்பாடும் எப்படி உள்ளது என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யவும், அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் நிர்ணயிக்கப்படவும் வாய்ப்புள்ளன. எனவே ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளை மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. கோவை மாநகராட்சியிலும் ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டத்தை விளம்பரப்படுத்த விளம்பரங்கள், துண்டறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.

கோவை மாநகராட்சி ஆணை யாளர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, ‘கோவை மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிடங்கள் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டத்தில் கழிப்பிடம் கட்டுவது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான நல்ல திட்டங்கள் உள்ளன. அதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். ‘ஸ்வச்சட்டா’ செயலி பயன்பாட்டில் கோவை மாநகராட்சியே முதலிடத்தில் உள்ளது. இத்திட்டங்களை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த ஏதுவாக விளம்பரங்கள் தயாராகி வருகின்றன’ என்றார்.

முன்னிலையில் கோவை

உள்ளாட்சி நிர்வாகங்களில் மக்கள் பங்களிப்போடு தூய்மைப் பணியை மேற்கொள்ள ‘ஸ்வச் சர்வெக்சான்’ திட்டத்தின் கீழ் ‘ஸ்வச்சட்டா’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், புகார்களை புகைப்படமாக பதிவு செய்யும்போது, உடனடியாக கவனித்து உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த செயலியை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியாவிலேயே கோவை நகரம் முன்னிலையில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். கோவையில் ‘ஸ்வச்சட்டா’ செயலி மூலம் 873 புகார்கள் பெறப்பட்டு, அதில் 850 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்