குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்திடுக: முத்தரசன்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கூட்டுறவு துணை பதிவாளர் உள்ளிட்ட 8 பதவிகளில் உள்ள 85 காலிப்பணியிடங்களுக்கு இம்மாதம் 9ம் தேதி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்கின்றனர். ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்தவர்களில் எண்ணிக்கையில் 0.15 சதவிகிதத்தினர் மட்டுமே. தமிழகத்தில் அரசு பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சலுகைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் 2011 வரை, குரூப்-1 தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆக இருந்தது. தற்போது 30 ஆக குறைக்கப்பட்டுவிட்டது. இதே போல், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 என இருந்தது. இதை 35 ஆக அதிமுக அரசு குறைத்து விட்டது.

இதனால் குரூப்-1 போன்ற உயர் பதவிகளை பெற, தமிழ் மொழியில் படித்த கிராமப்புற இளைஞர்களும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறத்தில் உள்ளவர்களோடு தேர்வில் போட்டியிட்டு, உயர் பதவிகளுக்கு வரமுடிவதில்லை. இதனால் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு, குரூப் 1 தேர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 21 மாநில அரசுகள் வேலை தேடும் இளைஞர்களுக்கு விதிகளை தளர்த்தி, ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளன. குரூப்-1 போன்ற உயர்பதவி போட்டித் தேர்வுகளுக்கான வயது வரம்பை 45 வரை உயர்த்தி சலுகைகளை வழங்கியுள்ளன.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார், மேற்குவங்காளம், ஜார்கண்ட், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, அஸ்ஸாம், மணிப்பூர், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மிசோரம், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா,கேரளா போன்ற மாநிலங்களில் குரூப்-1 தேர்வு எழுத வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 முதல் 40 வரையிலும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37 முதல் 45 வரையிலும் வழங்கப்பட்டுள்ளது,

மேலும் ராஜஸ்தான் ஜார்கண்ட், குஜராத், பஞ்சாப், பீகார், ஒடிசா மாநிலங்களில் பெண்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களை போலவே, தமிழகத்திலும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-1 போட்டித் தேர்வை எழுத அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்