மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த ‘தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குவதேயில்லை’- மத்திய அமைச்சர் புகார்

By செய்திப்பிரிவு

ரூ.1000 கோடி மதிப்புடைய பல்நோக்கு மருத்துவமனைத் திட்டத்துக்கு இடம் வழங்க மறுத்ததுபோல, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கோவை பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசினார்.

கோவையில் பாஜக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பொதுக்கூட்டம் வஉசி பூங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

சிறுவயதில் நான் பார்த்த கோவை, ஆட்டோமொபைல், பம்ப்செட் உற்பத்தியில் முன்னணியில் இருந்தது. ஆனால் இன்று, இருள் சூழ்ந்து கிடக்கிறது. தமிழக அரசியல் தலைமைகளால் கோவையின் தொழில் சூழல் அழிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் மீதுள்ள அக்கறையை தொழில்வளர்ச்சியில் அவர்கள் காட்டவில்லை. மத்திய மின் தொகுப்பில் இருந்து தாராளமாக மின்சாரத்தை வழங்காமல் இருந்திருந்தால், தமிழகமே இன்று முடங்கிப் போயிருக்கும். அதிமுக அரசின் செயல்பாட்டுக்கு இதுவே உதாரணம்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்முன், காங்கிரஸ் - திமுக ஆட்சியில் இருந்த போது, எங்குபார்த்தாலும் ஊழல் நடந்தது. அவர்களுக்கு மக்கள் நலன் என்ற சிந்தனை இல்லை. தங்களுக்கான நலனையே பார்த்தார்கள். தொழில்வளர்ச்சி சரிந்து வருகிறது. விவசாயம் 2 சதவீத வளர்ச்சியைத் தாண்டவில்லை. கல்வியில் தனியார் ஆதிக்கத்தைத் தடுக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

பாதுகாப்பான மாநிலமாக இருந்த தமிழகம், சட்ட ஒழுங்கும் சீர்குலைந்து, தீவிரவாதிகள் தலைதூக்கி, கூலிப்படையினரின் கைகளில் சிக்கியுள்ளது. அதைத் தடுக்க முயலாமல் கொலைகளை மறைக்கவே முயல்கிறது மாநில அரசு. சாதி மோதல்கள் அதிகரித்து, மத நல்லிணக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. எனவே திராவிட இயக்கங்களை வீட்டுக்கு அனுப்பி, பாஜகவின் ஆட்சியை அமைக்கும் நேரம் வந்துவிட்டது.

மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக தமிழகத்துக்கு வந்து சேர வேண்டுமென்றால், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் ஓர் அரசு தமிழகத்துக்கு வேண்டும். ஆனால் வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு மறுத்து வருகிறது. ரூ.1000 கோடி திட்டத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை தமிழகத்துக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் அதற்கான இடத்தை வழங்காமல் அத்திட்டத்தையே மாநில அரசு முடக்கிவிட்டது.

சர்வதேச தரத்துக்கு இணையான மருத்துவச் சிகிச்சை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் அதிமுக அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. இதுபோல பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய முடியும். தமிழகத்துக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மத்திய அரசு தயாராக இருந்தாலும், அதை பெற்று மக்களுக்குக் கொடுக்க மாநில அரசு தயாராக இல்லை. எனவே திராவிட இயக்கங்களின் ஆட்சிகள் மாற வேண்டும். பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக தலைவர்கள் எஸ்.ஆர்.சேகர், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும், வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அரசியல் சுனாமி

கட்சியின் பொதுச் செயலாளர் பி.முரளிதரராவ் பேசியதாவது:

பாஜக வெற்றிவிழா கொண்டாட்டத்துக்காக கோவைக்கு அடுத்தமுறை வரும்போது, அரைமணி நேரம் நான் நிச்சயம் தமிழில் பேசுவேன். தொழில்துறையில் முன்னோடியாகவும், நகைத் தயாரிப்பில் உலகின் நகைத் தலைநகராகவும் உள்ள கோவையை கடந்த 50 வருடங்களாக திமுக, அதிமுக கட்சிகள் புறக்கணித்துவிட்டன. பேரிடர்கள் ஏற்பட்ட போதெல்லாம் மக்களைச் சந்திக்க ஓடோடி வரும் நரேந்திர மோடி சரியான தேர்வா? மக்களையே சந்திக்காத முதல்வர் சரியான தேர்வா?

ஆல்கஹால் மாபியாவை தமிழக அரசு வைத்துள்ளது. அதனாலேயே எத்தனால் தயாரிப்பையும், அதன் மூலப் பொருளான கரும்பு உற்பத்தியையும் தமிழக அரசு ஊக்குவிக்கவில்லை. குடிநீர், பால் கிடைக்கவில்லை. ஆனால் 24 மணி நேரமும் மது கொடுக்கிறார்கள். அரசின் அடையாளமே டாஸ்மாக் தான். தமிழகத்தில் அரசியல் சுனாமி ஏற்படப்போகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

கல்வி

12 hours ago

மேலும்