ஓராண்டுக்குப் பின்னர் தொட்டபெட்டா சிகரம் திறப்பு: குவிந்த சுற்றுலா பயணிகள்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: ஓராண்டுக்கு பின்னர் தொட்டபெட்டா சிகரம் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிகரத்தை முதல் நாளிலேயே கண்டுகளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக உதகை-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை பழுதடைந்ததால் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.15 லட்சம் ஒதுக்கீட்டில் தொட்டபெட்டா சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, தொட்டபெட்டா ஊராட்சியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தொட்டபெட்டா சாலை சிறுபாலத்தினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

வனத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குகின்ற காரணத்தினால், ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க அதிக அளவில் வருகைப்புரிகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் தொட்டபெட்டாவும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு கடந்த ஜூன் மாதம் 2021-ம் ஆண்டு பெய்த கனமழையினால் தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலையில் உள்ள கல்வெட்டில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதன் காரணத்தினால் கல்வெட்டு சேதமடைந்து, வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

இதனை சீர்செய்யும் வகையில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் தொட்டபெட்டா சாலை சிறுபாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி மேற்கொள்ளும் பொழுது கல்வெட்டுக்கு பாதுகாப்பாக தடுப்புச்சுவரும் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தடுப்புச்சுவருடன் கூடிய தொட்டபெட்டா சாலை சிறுபாலம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் இச்சிறுபாலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை அமைச்சர் கூறினார்.

தொட்டபெட்டா சிகரம் ஓராண்டுக்குப் பின்னர் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்ட சிகரத்தில் குவிந்தனர். அவர்கள் தொட்டபெட்டா சிகரத்திலிருந்து தொலைநோக்கி மூலம் உதகை, மைசூரு, பாவனிசாகர் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

சிகரத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கேண்டின் கோடை சீசனுக்கு முன்னர் திறக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்