கொடநாடு விவகாரத்தில் உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை காணொலி வாயிலாக சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், "முன்பு முதலமைச்சராக இருந்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார்? அதனை அவரால் பட்டியல் போட முடியுமா?

நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பழனிசாமி, திமுக - பொய்யான - கவர்ச்சியான வாக்குறுதிகளைத் தந்ததாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். நாங்கள் கொடுத்த வாக்குறுதியில் 70 விழுக்காடு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்பது மக்களுக்கே தெரியும். சொன்னதோடு சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியிருக்கிறோம்.

அவர் எதை கவர்ச்சியான வாக்குறுதி என்கிறார்? எதைப் பொய்யான வாக்குறுதி என்கிறார்? அவரது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது. அதில் உண்மைக் குற்றவாளி யார் என்றும் உண்மையான காரணம் யார் என்றும், கூலிப்படையை அமர்த்தியது யார் என்றும், ஏவியது யார் என்றும் கண்டுபிடித்தாரா?. தினசரி கொலை, கொள்ளை நடப்பதாக அவர் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான், ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகச் செயல்பட்ட கொடநாடு பங்களாவிலேயே கொலையும், கொள்ளையும் நடந்தது. இது சம்பந்தமான வழக்குகளைப் பதிவு செய்தது அதிமுக ஆட்சிதான்.

இதில் சம்பந்தப்பட்ட சிலர், அப்போது சொல்ல முடியாத சில தகவல்களை இப்போது சொல்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. இந்த வழக்கை தூசி தட்டி எடுக்கிறோம் என்றதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநரையும் போய்ப் பார்த்தார்கள். அதற்கும் என்ன காரணம் என எனக்குத் தெரியாது.

ஜெயலலிதாவின் அடையாளமாக இருந்த கொடநாடு வீட்டில் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது என்பதால் அதில் உள்ள மர்மங்களை திமுக ஆட்சி அமைந்ததும் அது பற்றி விசாரிப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நானே குறிப்பிட்டுப் பேசினேன். அதனால்தான் ஆட்சி அமைந்ததும் அது சம்பந்தமான விசாரணையை முடுக்கிவிட்டேன். இதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை.

எந்த வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின் 173(8) பிரிவின்படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு. அதன்படிதான் நடத்தப்படுகிறது. இதுவும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிதான்.

இது பொய்யான வாக்குறுதியும் கிடையாது. கவர்ச்சிகரமான வாக்குறுதியும் கிடையாது. அம்மா வீட்டில் நடந்த கொலை - கொள்ளையில் உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று அதிமுகவினரே சொல்கிறார்கள். அவர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எனவே திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று வாக்குறுதி அளித்த கலைஞரின் மகன் நான். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

வாழ்வியல்

20 mins ago

தமிழகம்

36 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்