கோவை மாவட்டத்தில் கரோனா 3-வது அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

By டி.ஜி.ரகுபதி

கோவை மாவட்டத்தில், கரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களை விட, 3-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவையில் இதுவரை கரோனா தொற்றால் 2.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் 2.54 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த மாத இறுதி வாரத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் காணப்பட்ட தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, சமீப நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த 11-ம் தேதி 863 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 17-ம் தேதி 2,042 பேராக அதிகரித்தது. கரோனா முதல், இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை பரவல் வேகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வின்படி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் மூலம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று உறுதியாவதும் தெரியவந்துள்ளது. கடந்த 11-ம் தேதி 7 சதவீதமாக இருந்த தொற்று பரவல், நேற்று (ஜன.18) 20 சதவீதத்தை தாண்டியது.

மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 12 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 10 சதவீத படுக்கைகள் மட்டுமே தொற்றாளர்களின் பயன்பாட்டில் உள்ளது. 9 சதவீதம் பேர் சாதாரண படுக்கைகளில் உள்ளனர். 2 சதவீதம் பேர் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளில் உள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்க, தொற்றாளர்களை கண்டறிந்தவுடன், அவர்களுடன் முதன்மைத் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதிக்கிறோம். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துகிறோம்.

90 சதவீதம் முதன்மைத் தொடர்புகளில் இருந்தவர்களுக்கே கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டால் அங்கு தொற்றாளர்கள் வசிக்கும் இடத்தை மட்டும் தனிமைப்படுத்தும் வகையில் ‘மைக்ரோ கண்டெய்ன்மென்ட் ஜோன்’ அமைக்கிறோம். அதன்படி, 137 இடங்களில் மைக்ரோ கண்டெய்ன்மென்ட் ஜோன் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-வது அலையில் ஒருநாளைக்கு 5 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 3-வது அலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோவையில் எந்த வாரத்தில் தொற்று பரவல் அதிகளவில் இருக்கும் என உறுதியாக கூற முடியாது.

எனவே, பொதுமக்கள் முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது’’ என்றார்.

5 பேர் உயிரிழப்பு

“கோவையில் நேற்று ஒரே நாளில் 2,228 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,594 ஆக அதிகரித்துள்ளது. 786 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில அளவில் கரோனா பாதிப்புக்காக அதிகம்பேர் சிகிச்சை பெறும் மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கோவை மூன்றாம் இடத்தில் உள்ளது”என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

‘காய்கறி சந்தைகளில் சில்லறை விற்பனைக்கு தடை’

கோவை சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட், அண்ணா காய்கனி மார்க்கெட், உக்கடத்தில் ராமர் கோவில் வீதி காய்கனி மார்க்கெட், ராஜவீதியில் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் மற்றும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இங்கு, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆட்சியர் கூறும்போது,‘‘ காய்கறி சந்தைகளில் மொத்த வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. மார்க்கெட்டுகளை பிரித்து அமைக்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மாற்று நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்