குமரியை மிரட்டும் கனமழை; 2 பேர் பலி- வெள்ளம் சூழ்ந்த 23 கிராமங்களில் இருந்து மக்கள் மீட்பு

By எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்களாக மிரட்டி வரும் கனமழையால் 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளம் இழுத்துச் சென்ற ஒருவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலை, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழைநீர் நிரம்பி வெள்ளக் காடானது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உள்ள நிலையில் மலையோரங்களில் பெய்த கனமழையால் அணைக்கு உள்வரத்தாக 15,336 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து 15,018 கனஅடி தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், மற்றும் மழைநீர் கோதையாறு வழியாக ஓடி திற்பரப்பு அருவி வழியாக ஆர்ப்பரித்து கொட்டியது. திற்பரப்பு அருவி பகுதியே அடையாளம் தெரியாத வகையில் அங்குள்ள கல்மண்டபம், பூங்கா பகுதிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதைப்போல் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு போன்றவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த இரு நாட்களாக குமரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது.

மழைக்கு மத்தியில் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் களியல், பேச்சிப்பாறை, மரப்பாடி, வலியாற்றுமுகம், அருவிக்கரை, மாத்தூர், திக்குறிச்சி, காப்பிக்காடு, மங்காடு, சிதறால், ஞாறான்விளை உட்பட 23 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டன. அங்கிருந்த மக்களைத் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர். குறிப்பாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மங்காடு, பிலாந்தோட்டம், வாவறை, இஞ்சிபறம்பு, பள்ளிக்கல், மரப்பாலம், ஏழுதேசம், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட மக்கள் தீயணைப்புத் துறையினர், மற்றும் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு பள்ளிக்கல், மங்காடு, ஏழுதேசப்பற்று அரசுப் பள்ளிகளில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பேச்சிப்பாறை, குற்றியாறு, கடையாலுமூடு, களியல் உட்பட குமரி மலை கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கின.

மழையால் தோவாளை பகுதியில் இறுதிகட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. குமரி மாவட்டத்தில் இருவர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளம் இழுத்துச் சென்ற ஒருவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்