குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,070 கி.மீ. நீளமுள்ள 9,224 மழைநீர் வடிகால்கள் மற்றும் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வடசென்னை பகுதிக்கு உட்பட்ட கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் 769 கி.மீ. நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபோது, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மேலும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகளில் அதிக கவனம் செலுத்தி மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி மழைநீர் வெளியேற தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று நடைபெற்றது.

கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் 46 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்ததாரர்களின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்ய மாநகராட்சியின் சார்பில் கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்யாத 4 ஒப்பந்ததாரர்களுக்குக் காரணம் கேட்டுக் குறிப்பாணையும், 5 ஒப்பந்ததார்களுக்கு ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பின்படி அமைக்கப்படாமலும், தரத்தில் குறைபாடுள்ள வடிகால்களை அமைத்த ஒரு ஒப்பந்ததாரருக்கு அவ்வடிகால்களை இடித்துவிட்டு, அவர்களின் சொந்த செலவினத்திலேயே தரமான, சரியான வடிவமைப்பில் மழைநீர் வடிகால்களை மீண்டும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.109.88 கோடி மதிப்பில் 47 நீர்நிலைகளைப் புனரமைத்துச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியை முடிக்காத 4 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.106.47 கோடி மதிப்பீட்டில் 5.9 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் கட்டுமானப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒரு ஒப்பந்ததாரர் மற்றும் இதுவரை பணியைத் தொடங்காத 3 ஒப்பந்ததாரர்களுக்கு காரணம் கேட்டுக் குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்காத காரணத்துக்காக ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் நீர்வழி கால்வாய் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டும்.

மேலும், மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பு என்பது சென்னை மாநகருக்கு மழைக் காலங்களில் மழைநீர் வெளியேற மிகவும் இன்றியமையாத ஒரு கட்டமைப்பு என்பதால் இப்பணிகளைத் துரிதப்படுத்தவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

வர்த்தக உலகம்

42 mins ago

ஆன்மிகம்

36 secs ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்