9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு: இதர மாவட்டங்களில் காலி இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்.9-ல் இடைத்தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 755 ஊராட்சிஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,577 ஊராட்சித் தலைவர்கள், 12,252 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதில் சராசரியாக 77.43 சதவீத வாக்குகள் பதிவாயின. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84.30 சதவீதம், விழுப்புரத்தில் 83.66, கள்ளக்குறிச்சியில் 82.25, ராணிப்பேட்டையில் 80.89, திருப்பத்தூரில் 78.88, வேலூரில் 77.63, தென்காசியில் 73.96, திருநெல்வேலியில் 70.81, செங்கல்பட்டில் 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள், அந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, 9 மாவட்டங்களில்மீதமுள்ள 35 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் 34 லட்சத்து 66 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்காளர்கள் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் அந்தந்த உள்ளாட்சிப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் 13 வகையானகரோனா தடுப்பு பணிகளுக்கானபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேற்றே அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குதொடங்கி, மாலை 6 மணி வரைநடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குள் இறுதிநேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வரும் நிலையில், அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதை காட்டியும், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர்உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கரநாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, வெப் ஸ்ட்ரீமிங் முறையில் நேரடியாக தேர்தல்ஆணைய தலைமையகம், மாவட்டஆட்சியர்கள் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர்,வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம்தேதி எண்ணப்படுகின்றன. மொத்தம் 74 மையங்களில் 12-ம் தேதிகாலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 min ago

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

38 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்