இன்று சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம்- யானையின் முக்கியத்துவத்தை விளக்கி குறும்படம் இயக்கிய 2-ம் வகுப்பு மாணவி

By ஆர்.டி.சிவசங்கர்

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு குன்னூரை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவி, யானைகள் குறித்த குறும்படத்தை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.

சர்வதேச யானைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன.

சர்வதேச யானைகள் தினத்தை யொட்டி, யானையின் வாழ்வியல், உணவுப் பழக்கம், காட்டில் அதன் முக்கியத்துவம் போன்ற தகவல்களை சேகரித்து,குன்னூரைச் சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவி நிரோஷினி, தனது தந்தை கார்த்திக்கின் உதவியுடன் யானைகளை பற்றி சிறந்த முறையில் விளக்கி இயக்கியுள்ள குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறும்படம் இயக்கிய அனுபவம் குறித்து நிரோஷினி கூறியதாவது:

யானைகள் வனத்தின் முக்கிய அங்கமாகும். வனத்தை பரப்புவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. யானைகள் விதைகளை பரப்பும் காரணியாக திகழ்ந்து வருகின்றன. யானைக்கு ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ வரை உணவு கிடைக்க வேண்டுமானால், சராசரியாக 20 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றால் தான் அதற்கு உண்டான உணவு கிடைக்கும். அதன் செரிமானத் தன்மை குறைவு என்பதால் 40 முதல் 50 சதவீதம் உணவு தான் செரிமானம் ஆகும். மீதி உணவு செரிமானம் ஆகாமல் வெளியேற்றப்படுகிறது.

ஒரு வனப்பகுதியில் சாப்பிட்டவிதைகள் மற்றொரு வனப்பகுதியில் வந்து விழுவதால், அங்கு தாவரங்கள் வளர ஆரம்பிக்கின்றன.

கோடை காலங்களில் வறண்டு காணப்படும் ஓடைகளில், பூமிக்கு அடியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், வனப்பகுதிகளில் உள்ள எந்த விலங்குகளாலும் பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரைகண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை யில், யானைகளின் தும்பிக்கையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் இயங்குவதால் பூமிக்கு அடியில் செல்லும் தண்ணீர் மற்றும் தேவையான தாது உப்புகளை கண்டுபிடிக்கிறது.

கோடை காலத்தில் மான், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் தாது உப்பு கிடைக்க யானைகள் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றன. இவ்வாறு யானை தனக்காக ஒருவிஷயத்தை செய்யும்போது அது வனத்தில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் பெரும் பயனைத் தருகிறது.

ஆசிய யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால், தங்களுக்கு தேவையான உணவுக்காக விளை நிலங்களை சூறையாடுவதுடன், கிராமப்புற பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யானையின் வாழ்வியலை விளக்கி குறும்படம் இயக்கி வெளியிட்டுள்ளேன், என்றார்.

இந்த குறும்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுமியின் இந்த செயல் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

33 mins ago

விளையாட்டு

56 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்