இந்தியப் பண்பாட்டுப் பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படும்: சு.வெங்கடேசனுக்கு மத்திய அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் 12,000 ஆண்டு காலப் பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடி, சிறுபான்மையினர், தென்னிந்தியருக்கு இடம் இல்லை என்பதைக் கடந்த ஆண்டு சு.வெங்கடேசன் மக்களவையில் எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அக்குழு மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அலுவலகச் செய்திக்குறிப்பு:

“இந்தியாவின் 12,000 ஆண்டு காலப் பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடி, சிறுபான்மையினர், தென்னிந்தியர்க்கு இடம் இல்லை என்பதைக் கடந்த ஆண்டு சு.வெங்கடேசன் மக்களவையில் எழுப்பி இருந்தார்.

தற்போது அக்குழு இக்கருத்துகளையும் உள்ளடக்கி மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது என ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.

விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா?

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்து வடிவில் அளித்த பதிலில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அக்குழுவின் உள்ளடக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சு.வெங்கடேசன், "அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை.

தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமுகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் ஆய்வாளர்கள் யாரும் அக்குழுவில் இல்லை. விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா?'' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 23, 2020 அன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்கு இக்குழுவை கலைக்குமாறு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் நேற்று கூடிய மக்களவையில் முதல் நாளன்று சு.வெங்கடேசன் இதுகுறித்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

கடும் விமர்சனத்திற்கு ஆளான அந்தக் குழு இன்னும் நீடிக்கிறதா? கூடுகிறதா? அக்குழுவைக் கலைத்து புதிதாக பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில் "இக் குழு 2016இல் அமைக்கப்பட்டது.

ஜனவ‌ரி 3, மே 2 - 2017 தேதிகளில் இரண்டு முறை கூடியுள்ளது. தற்போது இக்குழுவை மாற்றி அமைக்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும்போது அதன் உறுப்பினர் உள்ளடக்கம் பன்மைத்துவ நோக்கில் அமைவதற்கான எல்லா ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும்" என்று தெ‌ரிவித்தார்.

"இது 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு எழுப்பிய குரலுக்கு கிடைத்துள்ள வெற்றி. ஆனாலும் அரசின் நோக்கம் குறித்து கவனமும் பரந்த விவாதமும் தேவைப்படுகிறது. வரலாற்றுத் திரிபு, பன்மைத்துவம் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்பை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியா முழுமையுமான வரலாற்று ஆய்வாளர்களின் கடந்த கால, நிகழ்கால அறிவியல் பூர்வமான பங்களிப்புகள் சிதைவுறாமல் பாதுகாப்போம்" என்று சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

சினிமா

13 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்