ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார்: வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமனம்

By ஆர்.பாலசரவணக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமாரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் எனவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு 2 வீட்டு மனைகளும், ரூ.4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்தச் சொத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும், அதனால் விசாரணையைத் தொடர வேண்டியதில்லை என்றும் கூறி, வழக்கை முடிக்கவும் பொதுத்துறை உத்தரவிட்டதாகக் கூறப்பட்டு இருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இதனையடுத்து, நீதிபதிகள், ராஜேந்திரபாலாஜி அமைச்சரான பிறகு சேர்த்த சொத்து குறித்து மட்டும் விசாரிக்கக் கூடாது, 1996ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி துணைத் தலைவரானது முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். ஏனென்றால், அவர் 1996ஆம் ஆண்டே பொது ஊழியராக இருந்துள்ளதால், இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆரம்பக்கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது எனக் கூறினார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக்குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்குப் பதிந்து விசாரிப்பது 'செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது' போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம்.நிர்மல்குமார் இன்று (ஜூன் 26) நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்துத் தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்