மூன்றாம் பாலினத்தவர், தன்பாலினச் சேர்க்கையாளர் உரிமை: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான உத்தரவு

By செய்திப்பிரிவு

தன்பாலினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் பட்சத்தில் வழக்கை முடித்துவிட்டு, எந்தவிதத் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர வரலாற்றுச் சிறப்புமிக்க பல உத்தரவுகளையும் நீதிபதி பிறப்பித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயன்றதால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவனக் காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.

இந்நிலையில், இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில், தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு பெண்களின் பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டார். இதில் இருவரின் பெற்றோரும் பெண்களின் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் கவுன்சிலிங்கில் பங்கேற்றார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஆணோ, பெண்ணோ, மாயமானதாக புகார் வந்தால், அதுகுறித்த விசாரணையில் அவர்கள் தன்பாலினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபின், வழக்கை முடித்து, எந்தவிதத் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தன்பாலினச் சேர்க்கையாளர்களைக் கையாள்வதில் திறமை வாய்ந்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, எட்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான நிதி, சட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும், மத்திய சமூக நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தன்பாலினச் சேர்க்கையாளர்கள் தங்க வசதியாக, தங்குமிடங்களைப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும் எனவும், தன்பாலினச் சேர்க்கையாளர்கள் தொடர்பாக மத்திய -மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போலீஸ், சிறைத்துறை, நீதித்துறை, கல்வித்துறைகளில் தன்பாலினச் சேர்க்கையாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறைகளில் தன்பாலினச் சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெறாமல் தடுக்கத் தனியாக அடைக்க வேண்டும் எனவும், தன்பாலினச் சேர்க்கையாளர்களுக்குப் பாலின மாற்று சிகிச்சை வழங்கத் தடை விதிக்க வேண்டும் எனவும், அச்செயலில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி-கல்லூரிகளில் ஆண் - பெண் தவிர்த்து பாலின நடுநிலையாளர்களுக்கு எனத் தனிக் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் கல்வி ஆவணங்களில் பெயர், பாலின மாற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு விண்ணப்பங்களில், ஆண்-பெண் மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பகுதியையும் சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்க்ல செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

சினிமா

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்