தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்கி உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழைப் பயிற்று மொழியாக்கும் சட்டத் திருத்தத்தையும், தமிழைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்படியாகக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் சட்டத்தையும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் தமிழ் மொழி, இனம், நிலப்பரப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் தேவை குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதன் ஆக்கபூர்வமான நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதை விட மிகவும் முக்கியம் தமிழர்கள் தங்களின் அடையாளங்களை இழந்துவிடாமல் தடுப்பதற்கு உதவும் வகையில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுவது ஆகும்.

தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழார்வலர்களின் 30 ஆண்டு கால கனவு ஆகும். ஆனால், இந்தக் கனவு மட்டும் கைக்கெட்டாமல் தொடுவானம் போல விலகிக்கொண்டே செல்கிறது. அதற்குக் காரணம் தமிழைப் பயிற்றுமொழியாக்க எந்த அரசும் முழு மனதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

நெருக்கடி நிலை நடைமுறைக்கு வரும் வரை தமிழ்நாட்டில் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்தமாகவே 29தான் இருந்தன. அதன்பிறகு தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்று தொடங்கும் அளவுக்கு புற்றீசல் போன்று ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதனால் 1990-களின் தொடக்கத்தில் பயிற்று மொழி என்ற நிலையிலிருந்து தமிழ் படிப்படியாக மறையத் தொடங்கியது.

தமிழ் பயிற்றுமொழியாக இல்லாவிட்டால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும் என்பதில் தொடங்கி கலாச்சார அடிப்படையிலான பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்பதால்தான், அனைத்துவிதப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரையிலாவது தமிழைப் பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்த அப்போதைய திமுக அரசு, அதன்பின் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி என்ற பலவீனமான அரசாணை மட்டும் 19.11.1999இல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அரசாணையும் அடுத்த 5 மாதங்களில் உயர் நீதிமன்றத்தால் செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதற்குப் பிந்தைய 20 ஆண்டுகளில் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் போட்டிப்போட்டுக் கொண்டு ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதுமட்டும் போதாது என்று 2006 - 11 திமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை வலிந்து திணிக்கப்பட்டது.

அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாக்கக் கோரி தமிழறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, தமிழ்நாட்டில் 2122 பள்ளிகளில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது.ஆனால், இன்றோ ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது.

சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்கூட அப்துல் கலாம், சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட அறிஞர்கள் தமிழ் வழியில்தான் படித்தனர். நானும் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்தவன்தான்.

ஆனால், இப்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, தாய்மொழியான தமிழ் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் அரசுகள் கவலைப்படவில்லை.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாளான நேற்று தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் தேசிய ஆட்சி மொழிகளாக அறிவிக்கச் செய்யப்போவதாக முதல்வர் கூறியுள்ளார். அவரது மொழியுணர்வு பாராட்டத்தக்கது.

அதே நேரத்தில் அந்த உணர்வு அவரது அடி மனதிலிருந்து எழுந்ததாக இருந்தால், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியைக் கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கான இன்றைய அவசர, அவசியத் தேவையாகும்.

தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் சட்டம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு சட்டமான கல்வி பெறும் உரிமை சட்டத்தின் 29 (எஃப்) பிரிவில் , “நடைமுறைக்குச் சாத்தியமான வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வாசகத்தில் ‘‘நடைமுறைக்குச் சாத்தியமாகும் வகையில்’’ என்பதை மட்டும் நீக்கி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்தச் சட்டத் திருத்தத்தையும், தமிழைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்படியாகக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் சட்டத்தையும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் தமிழ் மொழி மீதான பற்றை திமுக அரசு நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்