குழந்தைகளைத் தாக்கும் புதிய கரோனா; தடுப்பூசி சோதனையை விரைவுபடுத்துக: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரிலிருந்து பரவும் புதிய வகை கரோனா வைரஸ் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் சிங்கப்பூர் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என கேஜ்ரிவாலைத் தொடர்ந்து ராமதாஸும் கோரிக்கை வைத்துள்ளார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''சிங்கப்பூரில் புதிதாகப் பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கரோனா வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த வைரஸ் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குழந்தைகளை கரோனாவில் இருந்து பாதுகாக்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டன. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அடுத்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 18 வயது நிறைவடைந்த மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் மே ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் கூட, அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

தமிழ்நாட்டில் கூட நாளை மறுநாள் முதல்தான் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. ஆனால், அதற்குள்ளாக 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்குப் புதிய வகை கரோனா வைரஸால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேகமாகப் பரவி வரும் B.1.617 என்ற உருமாறிய கரோனா வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் கரோனா கடந்த சில மாதங்களுக்கு முன்பே முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிக அளவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்நாள் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் சிங்கப்பூரில் மொத்தம் 333 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பான்மையினர் 16 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆவர். சிங்கப்பூருக்கு அருகில் உள்ள தைவான் தலைநகர் தைபேயிலும் இதே வைரஸ் பரவி குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியியுள்ளது. அதனால் இரு நகரங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சிங்கப்பூரில் குழந்தைகளைத் தாக்கி வரும் B.1.617 வகை கரோனா உருமாறிய வைரஸ் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது என்பதுதான். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த B.1.1.7 வகையிலிருந்து இது உருமாறியதாகத் தெரிகிறது. இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்து, மராட்டிய மாநிலத்தின் சில பகுதிகளில் B.1.617 வகை கரோனா இன்னும் இருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகளைத் தாக்கும் புதிய வகை கரோனா வேகமாக பரவும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். புதிய வகை கரோனா தாக்குதலில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக இரண்டு கட்டங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதற்கட்டமாக சிங்கப்பூரிலிருந்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னைக்கும், தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை சோதனைகளுக்கு உள்ளாக்கி குறைந்தபட்சம் இரு வாரம் தனிமைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அடுத்தகட்டமாக, குழந்தைகளுக்கு உடனடியாக கரோனா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். சிங்கப்பூர் குழந்தைகளைக் காக்க 16 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக அந்நாட்டின் மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்கா இன்னும் ஒருபடி மேலே போய், 12 வயது நிரம்பியவர்களுக்கான ஃபைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. உலகிலேயே 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள் அதிகமுள்ள இந்தியாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகளை உடனடியாகப் போட வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.

இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தக் கூடிய கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் முதற்கட்ட ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 2 மற்றும் 3-ஆம் கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு நேற்று முன்நாள் அனுமதி அளித்துள்ளது. கால சூழலுக்கும், உலக சுகாதார நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கும் ஏற்ற வகையில் இந்தத் தடுப்பூசி ஆய்வுகளை விரைவாக முடித்து, அவசர காலப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ் டி தடுப்பூசியை அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அந்த நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வுகளை விரைவுபடுத்தவும், மற்ற இரு தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குச் செலுத்துவதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இந்தியக் குழந்தைகளை கரோனாவிலிருந்து அரசு பாதுகாக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்