தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போதெல்லாம் தலைமைச் செயலகத்தில் 32 ஆண்டுகளாக பெயர் பலகை எழுதி வரும் முதியவர்: தந்தை, மகனுக்கு பெயர் பலகை எழுதும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போதெல்லாம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களுக்கு பெயர் பலகை எழுதும் பணியில் முதியவர் ஒருவர் 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் அலுவலகங்களில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் அனைத்துத் துறை அமைச்சர்களின் பெயர் பலகைகளாக குவிந்து கிடந்தன. அங்கு முதியவர் ஒருவர் அவற்றில் உள்ள பெயர்களை நீக்கி, அந்த பெயர் பலகைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து ‘இந்துதமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது பெயர் ஏ.டி.மணி. சென்னை கிண்டியில் வசிக்கிறேன். நான் கடந்த 1960-ம் ஆண்டு கிண்டியில் இருந்த தமிழ்நாடு சிறுதொழில் (டான்சி) நிறுவனத்தில் பெயர் பலகை எழுத்தராக பணியில் சேர்ந்தேன். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் அந்நிறுவனம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றியவர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். நான் விருப்ப ஓய்வில் வந்துவிட்டேன்.

அதன் பிறகு 1989-ம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களின் பெயர் பலகைகளை எழுத அதிகாரிகள் அழைத்தனர். அதன் பேரில் அப்போதிலிருந்து முதல்வர், அமைச்சர்கள் மட்டுமல்லாது அரசின் பல்வேறு துறை அதிகாரிகளின் பெயர் பலகையை எழுதி கொடுத்து வருகிறேன். இப்பணிக்காக, எனக்கு தலைமைச் செயலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதி கொடுக்கும் பலகைக்கு ஏற்ப கட்டணத்தை அரசு எனக்கு வழங்கும்.

நான் மறைந்த முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முதல்வர் பதவி வகித்தபோது பெயர் பலகை எழுதி கொடுத்துள்ளேன். இப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை எழுத தயாராகி வருகிறேன். எனது காலத்தில் தந்தை, மகனுக்கு பெயர் பலகை எழுத கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒருவேளை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், தந்தை, மகன், பேரன் என 3 தலைமுறைக்கும் பெயர் பலகை எழுதிக் கொடுத்த பெருமையும் வந்து சேரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வேலை வாய்ப்பு

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்