கடலூர் நகரம் விரிவடைய ஆங்கிலேயர் கட்டிய ஆற்றுப் பாலங்கள்

By க.ரமேஷ்

கடலூர் புதுநகரின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பக்கங்களிலும் சுற்றிச் சுழன்று பாய்ந்து வளம் சேர்ப்பவை தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆகிய ஆறுகளாகும்.

இந்த இரு ஆறுகளின் குறுக்கே கட்டப்படுள்ள பாலங்களே கடலூர் நகரை வடக்கிலும் தெற்கிலும் இணைப்பவையாக அமைந்துள்ளன. சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமென்றால் இவ்வழியில் இணைப்புப் பாலங்களாக கெடிலம் ஆற்றிலும், தென்பெண்ணை ஆற்றிலும் அமைந்துள்ள இந்த இரண்டு பாலங்களையும் கடந்துதான் செல்ல வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் இந்த இரு ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கும் இந்தப் பாலங்களில் பயணிக்கும் போது, அவற்றின் அருகிலேயே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பாலங்களை பார்த்திருக்கலாம்.

அதிலும் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி 2015-ம் ஆண்டு இடிந்து விழுந்த போதிலும், அது சீர் செய்யப்பட்டு, நகராட்சிக்கான குடிநீர் குழாய்கள், புதை சாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் மற்றும் தொலைபேசி நிறுவனங்களின் வயர்கள் செல்கின்ற பாலமாக நீடித்திருக்கிறது. அதேசமயம், தென்பெண்ணை ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ஒரு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பாலங்களைக் கடக்கும்போது, இந்த இரு ஆறுகளிலும் முதன் முதலாக எப்போது பாலங்கள் கட்டப்பட்டன? பாலங்கள் கட்டப்படுவதற்கு முன்னர் இந்த இரு ஆறுகளையும் மக்கள் எவ்வாறு கடந்திருப்பார்கள்? என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த இரு ஆறுகளிலும் பாலங்கள் ஏதும் கட்டப்படாத அந்தக் காலகட்டத்தில், ஆற்றில் நீரில்லாத போது நடந்தும், நீர் நிறைந்து ஓடிய போது, சிறிய படகுகளைப் பயன்படுத்தியும் மக்கள் ஆற்றைக் கடந்து வந்துள்ளனர்.

அத்தகைய பயணம் பொதுமக்களுக்கும், பல்வேறு பொருட்களைக் கொண்டு சென்ற வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது. பின்னர் செங்கற்களைக் கொண்டு தரைமட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டதால் மக்களின் பயணம் கொஞ்சம் இலகுவாகியது. ஆனால், அடிக்கடி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் செங்கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் பலமுறை முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. மக்களின் துயரத்தை அதிகமாக்கியது.

சமீப காலங்களில் கூட கடலூர் நகரம் புயல், மழை மற்றும் பெருவெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். அக்கால கட்டத்தில் எப்போதெல்லாம் கடலூர் நகரம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆங்கிலேயர் கால ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தால் 1752, 1784, 1795, 1808, 1820, 1831, 1840, 1842, 1853, 1871, 1874, 1884 மற்றும் 1887 ஆகிய ஆண்டுகளின் புயல், மழை மற்றும் பெருவெள்ளத்தால் கடலூர் நகரம் பாதிக்கப்பட்டதையும், அதிலும் குறிப்பாக 1887-ம் ஆண்டு பெரும் சேதம் ஏற்பட்டதையும், அதனால் மக்களின் பயணம் முற்றாகத் தடைபட்டுப் போனதையும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆகிய இரு ஆறுகளின் மீதும் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அன்றைய பிரிட்டிஷ் அரசு அதற்கான திட்டங்களை வகுத்தது.

கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் செலவில் ஒரு புதிய இரும்புப் பாலம் கட்டுவதற்கான பணிகள் 1888-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 6 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான நிதியாக வருடத்திற்குப் ரூ.10 ஆயிரம் என 6 ஆண்டுகளுக்கு ரூ.60 ஆயிரத்தை தென்னார்க்காடு மாவட்ட நிர்வாக போர்டு வழங்குவதென்றும், வருடத்திற்கு ரூ.5 ஆயிரம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ30 ஆயிரத்தை கடலூர் நகராட்சி வழங்குவதென்றும், மீதத்தொகையான ரூ.76 ஆயிரத்தை சென்னை மாகாண நிதியில் இருந்து வழங்குவதென்றும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. திட்டமிடப்பட்டவாறு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 1895-ம் ஆண்டு பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல, 1888-ம் ஆண்டிலேயே கடலூரையும் புதுச்சேரியையும் இணைக்கின்ற வகையில் தென்பெண்ணை ஆற்றிலும் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் செலவில் ஒரு பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளின் முடிக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான நிதியை 1888-89-ல் ரூ.40 ஆயிரம், 1889-90-ல் ரூ.30 ஆயிரம் மற்றும் 1890-91-ல் ரூ.30 ஆயிரம் என 3 வருடங்களில் மொத்தம் ரூ. 1 லட்சத்தை தென்னார்க்காடு மாவட்ட நிர்வாக போர்டு வழங்குவதென்றும், மீதத்தொகையான ரூ.76 ஆயிரத்தை சென்னை மாகாண நிதியில் இருந்து வழங்குவதென்றும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. திட்டமிடப்பட்டவாறு 3 ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 1891-ம் ஆண்டு பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த இரண்டு பாலங்களும் கட்டப்பட்டதால் கடலூர் மக்களின் பயணம் இலகுவாகியது. கடலூர் நகரைக் கடந்து செல்வதும் எளிதானது. மேலும் கெடிலம் பாலத்தால் கடலூர் புதுநகரும், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் துறைமுகச் சந்திப்பு ஆகிய இரயில் நிலையங்களும் இணைக்கப்பட்டன. சுருங்கக் கூறுவதெனில், கடலூர் ஒரு நகரமாக விரிவடைவதற்கும், வணிகம் பெருகுவதற்கும், அரசாங்கப் பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதற்கும் இந்த இரு பாலங்களும் பெரும் அடித்தளத்தளத்தை அமைத்துக் கொடுத்தன என்று கூறலாம் என்கிறார் கடலூர் பெரியார் அரசு கல்லூரி வராலற்றுத்துறை உதவி பேராசிரியர் நா. சேதுராமன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்