கரோனா கட்டுப்பாடுகளால் கோயில் விழாக்களுக்கு மீண்டும் தடை; 2-வது ஆண்டாக வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்: அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து 2-வது ஆண்டாக பாதிக்கப்பட்டுள்ளது. சீசன் நேரத்தில் தடை விதிக்கப்பட்டதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், நாதஸ்வரம், மேளவாத்தியம், பாவைக்கூத்து, தெருக்கூத்து, கனியான்கூத்து, வில்லிசை போன்ற ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. இந்த கலைகளைச் சார்ந்த கலைஞர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு நாட்டுப்புறக் கலைதான் வாழ்க்கை. வேறு தொழில் எதுவும் தெரியாது. நாட்டுப்புற கலைகளை நம்பியே இவர்களது குடும்பங்கள் இருக்கின்றன.

வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களில் தான் கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். இந்த காலத்தில் தான் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிக தொழில் வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலான கலைஞர்கள் இந்த 5 மாதம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தான் ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்துவார்கள். வாங்கிய கடன்களை அடைப்பார்கள்.

கரோனாவால் பாதிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் இருந்து கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டன. நாட்டுப்புற கலைஞர்கள் தொழில் இல்லாமல் முடங்கினர். இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு கோயில் விழாக்கள் நடைபெற்று வந்தன.இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். பல இடங்களில் கோயில் கொடை உள்ளிட்ட விழாக்களுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு இழந்த வாழ்வாதாரத்தை இந்த ஆண்டு ஓரளவுக்கு மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நாட்டுப்புற கலைஞர்கள் இருந்தனர்.

மீண்டும் முடக்கம்

ஆனால், திடீரென அதிகரித்த கரோனா தொற்று காரணமாக கடந்த 10-ம் தேதி முதல் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக கோயில் விழாக்கள் நடத்த அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடக் கூடாது. 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி தமிழ் பண்பாடுமேம்பாட்டு மையம் இயக்குநர் செ.ஜெகஜீவன் கூறும்போது, கரோனா கட்டுப்பாடுகளால் நாட்டுப்புற கலைஞர்கள் 2-வதுஆண்டாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு சார்பில் ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் நலவாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்கவில்லை.

பாதுகாக்க வேண்டும்

வாழ்வாதாரம் இல்லாமல் பல இடங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் சீஸன் நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நாட்டுப்புற கலைஞர்களை, அவர்களது குடும்பங்களை, பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க மாவட்டம் தோறும் குழு அமைத்து, ஊரடங்கு காலம் முடியும் வரை நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசே பொறுப்பேற்று கொள்ள வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், நாட்டுப்புறக் கலைஞர்களின் வங்கி கடன், தனியார் நிதி நிறுவன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஊரடங்கு காலம் முடிந்து இசைக்கருவிகளை பழுது நீக்க நிதி வழங்க வேண்டும். அனைத்து கலைஞர்களின் வாழ்வாதரம் காக்க கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

7 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

21 mins ago

வலைஞர் பக்கம்

25 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

43 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்