இலவசங்கள் சரியா..! தவறா..!

By எஸ்.நீலவண்ணன்

“பிச்சைக் காரர்களுக்குதான் இலவசம் தேவை” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். “அட நல்லாருக்கே!” என்று நாம் வியப்பதற்குள், “வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மதிப்பு உரிமைத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. “வார்த்தைகளை மாற்றிப் போட்டாலும், இதுவும் ஒரு வகையில் இலவசமே!” என்று சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

“மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய், ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்” என அதிமுக அறிவித்துள்ளது. “அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்” என்று திமுக அறிவித்துள்ளது.

“கேரளாவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்” என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது.ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையிலும் “இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ.1,600-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

“மக்கள் தங்கள் உழைப்பால் ஈட்டும் வருமானத்தில் வாங்கிக் கொள்ள கூடிய பொருட்களை அவர்கள் கேட்காமலேயே அரசியல் கட்சிகள் இலவசமாக கொடுத்தால், வாழ்க்கை தரம் மேம்படும், பொருளாதாரம் வளரும் என்பது முட்டாள்தனம்.

தேவையற்ற இலவசங்கள் வழங்கு வதால் செலவாகும் மக்களின் வரிப்பணம், அரசை நிதிச் சுமையில் தள்ளும். அந்த நிதியை வட்டி மற்றும் அசலுடன் சரியாக செலுத்த முடியாத போது கைமாறாக நாம் உலக வங்கி சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் பரிந்துரையில் உலக வர்த்தக நிறுவனங்கள் சொல்லும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டில் தொழில் தொடங்க நமது வளங்களை எடுத்துக்கொள்ள, நமது உழைப்பை அவர்களுக்கு குறைந்த ஊதியத்தில் தாரை வார்த்து கொடுக்கும் நிலை வரும்.

மக்களாட்சி என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்ய வேண்டியது இருக்க, அதை விட்டு இப்படி செய்வதால் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் சிக்கப் போவது நாம் மட்டுமே!

இவற்றை எல்லாம் தவறு என்று முழங்குபவர்களை இந்த மக்களாட்சி, ‘ஜோக்கர்’ என விமர்சிக்கும் அளவுக்கு மக்களின் மனங்களை மழுங்க வைத்துள்ளன அரசியல் கட்சிகள். “நாம் யாருக்காக போராடுகிறோமோ, அவர்களே நம்மை கோமாளியாக பார்க்கிறார்கள்” என்ற தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் வசனமே நினைவில் வந்து போகிறது.

தரமான கல்வி, தூய குடிநீர் மற்றும் மருத்துவம் இதை அரசு இலவசமாக கொடுத்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வரும் வரை, இந்த இலவச காலாச்சாரம் தொடரவே செய்யும்” என்று ஒரு தரப்பு சொல்கிறது.

“இலவசங்கள் என்பது எளிய மக்களின் வளர்ச்சிக்கான தேவை; ஒரு முறைப்படுத்தலுடன் அதை வழங்குவதில் தவறேதும் இல்லை. சரியான நிதி நிர்வாகத்தோடு அதை செய்யும் போது, அதனால் நிதிச் சிக்கல் உருவாகி விடாது.

இங்கு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலுக்கு பல்வேறு காரண காரியங்கள் உள்ளன.

ஊழலை ஒப்பிடும் போது, எளிய மக்களுக்கான இலவசங்கள் பெரிய சிக்கலைத் தராது” என்று மற்றொரு தரப்பு சொல்ல இது நீண்ட விவாதமாகவே தொடர்கிறது.

இதற்கு மத்தியில் நாளை மறுநாள் வருகிறது நமக்கான ஜனநாயக கடமையாற்றும் விழா.

இலவசங்களை விரும்புவோரும், வெறுப்போரும் ஒரு சேர வாக்களிக்கப் போகிறோம்.

நமக்கானவர்களை நாம் தேர்ந் தெடுக்கப் போகிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

உலகம்

12 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

56 mins ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்