நீட் தேர்வில் சான்றிதழ் முறைகேடு: சிறையில் உள்ள தந்தை, மகளுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வில் போலிச் சான்றிதழைத் தயாரித்துக் கொடுத்து மருத்துவ இடம் பெற முயற்சி செய்ததாக மாணவி மீதும், அவரது தந்தை மீதும் புகார் அளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நிலையில் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியிடங்களை நிரப்புவதற்கான பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வில், பங்கேற்ற மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்ககத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷா (18) மருத்துவக் கலந்தாய்வில் அளித்த சான்றிதழ்களில் நீட் தேர்வு மதிப் பெண் சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்தது. அந்தச் சான்றிதழும், வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் சான்றிதழும் ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் டாக்டர் செல்வராஜ், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், பரமக்குடியைச் சேர்ந்த பல் மருத்துவர் பாலச்சந்திரன் என்பவரின் மகள் தீக்‌ஷா மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்தது தெரியவந்தது. நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மதிப்பெண் பெற்ற தீக்‌ஷா மோசடி செய்து அதை 610 மதிப்பெண்களாகத் திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவி தீக்‌ஷா நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழைப் போலியாகச் சமர்ப்பித்ததற்கு அவருடைய தந்தை பல் மருத்துவர் பாலச்சந்திரன் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் மாணவி தீக்‌ஷா, அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாகச் சிறையில் உள்ளனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தை, மகள் இருவரும் ஜாமீன் கோரிய மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலச்சந்திரன் 33 நாட்களாகச் சிறையில் உள்ளதாகவும், மனுதாரர்களின் செயலால் மற்ற மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. அறிக்கைக்குக் காத்திருக்கிறோம். ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவரையும் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு விட்டதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தீக்‌ஷாவின் தந்தை பாலச்சந்திரனுக்கு மட்டும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பெரியமேடு போலீஸில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 mins ago

க்ரைம்

6 mins ago

இந்தியா

4 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

மேலும்