வன்முறையைத் தூண்டும் வகையில் பேச்சு: பாஜக பிரமுகர்கள் இருவர் கைது

By டி.ஜி.ரகுபதி

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக பிரமுகர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த, புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக, கடந்த சில வாரங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி விவசாயிகளின் போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், கடுமையாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், இதற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில், மேட்டுப்பாளையத்தில் நேற்று (31-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான கல்யாண்ராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், எஸ்டிபிஐ, பிஎப்ஐ கட்சிகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

2 பேர் கைது

அதனடிப்படையில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மோதல் உருவாக்க முயற்சித்தல், தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்தல் ஆகியவை தொடர்பாக 147, 148, 149, 323, 504 , 505 (பி), 153(ஏ), 153 (பி), 269 ஆகிய 9 இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை மண்ணடியைச் சேர்ந்த கல்யாண்ராமன் (59), மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காட்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (49) ஆகியோர் மீது வழக்குப்பதிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், மேற்கண்ட இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவிநாசி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சதீஷ்குமார் மேட்டுப்பாளையம் முன்னாள் நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்தவர். டிவிஷனல் ஒருங்கிணைப்புச் செயலாளராகக் கட்சிப் பதவி வகித்து வருகிறார்.

கல்வீசித் தாக்கியவர் கைது

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்பவர் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. ‘தன்னைக் கல்வீசித் தாக்கிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அஷ்ரப் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வெற்றிச்செல்வி மேட்டுப்பாளையம் காவல்துறையில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், அஷ்ரப் மீது வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்தனர். இச்சம்பவங்களைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்